55 சென்ட்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 
“பெரியாண்டி, நல்லா யோசிச்சிப்பாரு, உனக்கு இந்த அரை ஏக்கர் வேணுமா ? இல்ல அம்பது லட்சம் வேணுமா ? சொல்லு என,” வியாபாரிகள் குறு விவசாயி பெரியாண்டியிடம் பேரம் பேசினர்.
“நீங்க சொல்றதெல்லாம் நல்லாதானிருக்கு, ஆனா எனக்கு என் பூமியை குடுக்க மனசில்ல  வேற மாதிரி எதுனாச்சும், தப்பா நெனக்காதிங்க, சரியாண்ணா”  என்றார் பெரியாண்டி.
“என்னமோ போ, பெரியாண்டி உன் சித்தப்பன், பெரியப்பன் வூட்டுக் காரங்க எல்லாம் பூமியைக் குடுத்துட்டு, பாரு, வீடு, வாசல்னு இருக்காங்கனு, நீ தான் வர சீதேவியை காலால் எட்டி ஒதைக்குற” என சொல்லியவாறு டீக்கடையிலிருந்து எழுந்து சென்றார்கள்.

பெரியாண்டி சின்னசேலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி மூன்று தலைமுறைகளுக்கு முன்பு சுமார் 15 ஏக்கர் நிலம் இருந்தது, பின் குடும்பத்தில் பங்கு பிரித்து கஷ்டத்திற்கு நிலத்தை வித்தது போக பத்து வருடங்களுக்கு முன்பு, இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் பங்கு பிரித்த போது ஆளுக்கு வெறும் 55 சென்ட், அதாவது சுமார் அரை ஏக்கர் மட்டுமே வந்தது.
பெரியாண்டியின் பெரியப்பா, சித்தப்பா வீட்டார் பங்கு பிரிந்த ஓரிரு வருடங்களில், தங்கள் பங்கை விற்றுவிட்டு மங்களூர், கேரளா, மும்பை, குடகு என ஆளுக்கொரு திசையாக சென்று விட்டனர், அதாவது அங்கும் அவர்கள் தினக்கூலி வேலைதான் செய்கிறார்கள்.
பெரியாண்டிக்கு விவசாய நிலத்தை விற்க மனமில்லை, பெரியாண்டியின் மகன் பாலன் வளைகுடா நாட்டில், ஆட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறான்,  மகள் அம்சவள்ளி பள்ளி இறுதிப் படிப்பு வரை படித்து விட்டு, பக்கத்தில் உள்ள தலைவாசலில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்.
இருக்கும் கொஞ்ச நிலத்தில் குறைவாக இருக்கும் தண்ணீரை வைத்து மானியம் வாங்கி, சொட்டு நீர்ப் பாசனம் போட்டுள்ளார் பெரியாண்டி.
ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும் என்பதால், நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறையை படித்து, அது போல செய்கிறார்.
கீரை, காய்கறி, பழம், என இயற்கைமுறையில் பெரியாண்டியும் அவர் மனைவி அஞ்சலையும் பயிரிட்டு தலைவாசல், சின்னசேலம் மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு சென்று காலையிலேயே விற்று விடுவார்.
இயற்கை முறையில் விளைந்ததால் அவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.
தினமும் குறைந்தது 300 முதல் 500 வரை சம்பாதிப்பார். பெண் கல்யாணத்திற்கு 5 பவுன் சேர்த்து வைத்துள்ளார். இப்படி வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோது தான், இவருடைய நிலத்திற்கு அருகில் மூன்று ஏக்கரில் பெரிய திருமண மண்டபம் கட்ட ஏற்பாடு நடந்தது. பக்கத்தில் இருக்கும் பெரியாண்டியின் 55 சென்ட் இடத்தையும் கடந்த ஆறு மாதமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள், 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை தருவதாக பேரம் பேசியும் பெரியாண்டி, தன் நிலத்தை இதுவரை தர மறுத்து விட்டார்.

பெரியாண்டியின் மகள் அம்சவள்ளிக்கு வரன் வந்தது, மிக வசதியான இடம் ஆனால் அவர்கள் 25 பவுனாவது போட்டால் பேசலாம் என சொல்லிவிட்டனர், உடன்
“ஏங்க, நீயும் நானுந்தான் ஆயுசுக்கும் மண்ணைப் பெசஞ்சு சம்பாரிக்கிறோம், பையனும், வந்து இந்த பூமியைதான் நம்பி ஜீவனம் நடத்தப் போறான், அவனும் பின்னாடி எவ்வளவு ஒழைச்சாலும், நம்மள மாதிரி தான் கஷ்டப்பட போறான், அதனால நம்ப பையனுக்கு ஊருக்குள்ள ஒரு வூடும், பாப்பாவுக்கு இருவது பவுனும் எடுக்க இந்த பூமியை வித்துரலாம்” என பேசினாள்.
“வேணாம் அஞ்சலை, நமக்குத் தகுந்த இடமா அஞ்சோ, பத்தோ பவுனு போட்டு கட்டிக் குடுத்திறலாம், அதுதான் நமக்கும் நாளைக்கு நல்லது, வெரலுக்கு தகுந்த வீக்கம்தான் இருக்கணும்” என்றார் பெரியாண்டி.
“ஏங்க நானு பேசிக்கிட்டே இருக்கன்னு பாக்காதீங்க எம்மவ நவத்துல (நகத்துல) மண்ணுபடாம  இருக்கணும், எம்மவன் மத்தவங்க மாதிரி மாடி வீடுகட்டி ஊருக்குள்ள இருக்கணும், நாம தான் இந்த தகர கொட்டாயில காலத்துக்கும் கெடந்துட்டம், அதுவளாவது நல்லாயிருக்கணும்” எனக் கண் கலங்கினாள்.
அதற்கு மேல் பெரியாண்டியால் பேச முடியவில்லை, எவ்வளவு உழைத்தும் காலத்துக்கும் தகரக் கொட்டாயிலும், மிகவும் கஷ்ட ஜீவனத்துடனும் தான் வாழ்க்கை போகிறது என எண்ணினார்.
அடுத்த நாள் காலையில் அருகிலிருந்த நகரத்துக்கு சென்றார் பெரியாண்டி, மண்டபத்துக்கு இடம் கேட்ட தொழிலதிபரின் வீட்டு முகவரிக்கு சென்றார். தொழிலதிபர் பெரியாண்டியிடம் விலை பேசிக்கொண்டு இருந்தபோது அவருடைய மனைவி வந்தார்கள்,
“என்ன கீரைக்காரரே, வந்து ஆறு மாசம் ஆச்சு, ஆளையேக் காணோம்,”
“கீரையெல்லாம், மொத்தமா இயற்கை அங்காடிக்கு எடுத்துட்டுப் போறாங்கம்மா, மீதி இருக்கிற காய்கறியெல்லாம், பக்கத்துலேயே வித்துடுதும்மா,” என்றார்.
“ஏங்க, நீங்க கூட என் சின்ன வயசுல சாப்பிட்ட மாதிரி இருக்குதுன்னு சொல்லுவிங்களே, காய்கறி, கீரை, எங்க வாங்கினன்னுக்  கேட்பிங்க இல்ல, அது இவர் வெளைய வச்சதுதாங்க” என்றார் அந்த அம்மா.
“அப்படியா, பெரியாண்டி, உண்மையிலயே ரொம்ப நல்லாயிருந்துச்சு, சரி இவ்வளவு நாளா நெலத்தை விக்காம இப்ப, ஏன் விக்குற”

குடும்ப பிரச்சினைகளைக் கூறினார், பெரியாண்டி,
சற்று நேரம் அமைதியாக இருந்த தொழிலதிபர், “சரி நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் பெரியாண்டி”
“சொல்லுங்கய்யா……..”
“நான் மண்டபம் பக்கத்துல வேற எடத்துலக் கட்டிடறேன், உங்க இடத்தை நீ விக்க வேணாம், அதுக்கு பதிலா மண்டபம் கட்ட வச்சிருந்த அந்த மூன்று  ஏக்கரை நீயே இயற்கை விவசாயம் பண்ணு, நானும் அடிப்படையில விவாசாயக் குடும்பத்துலப் பொறந்தவன் தான், அதனால, நீ காய்கறி, கீரை, பூ, பழம் சாகுபடி பண்ணு, எங்க வீட்டுக்கும் நல்லக் காய்கறி குடு, வயித்துக்கு மிஞ்சினது எதுவும் இல்லையே, அதுவுமில்லாம நானும் நம்ம பூமிக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நெனைக்கிறேன்”
“அய்யா, பொண்ணுக் கல்யாணம்……”
“ம்….. சரி ஒரு வருஷத்துக்கு எனக்கு போகியப் பணம் (குத்தகை) வேணாம், நான் போர், சொட்டு நீர் பாசனம் செஞ்சிடறேன், அந்த லாபத்தை நீ எடுத்துக்க, அதுக்கடுத்த வருஷம் எனக்கு நீ போகியம் குடுத்தால் போதும், சரியா,”
“சரிங்கய்யா, ரொம்ப நன்றிங்க !” என்று கிளம்பிய பெரியாண்டி, இன்னும் ஒரு வருஷம் மகள் திருமணத்தைத் தள்ளிப் போடலாம், இப்போதுதானே அம்சாவுக்கு 19 வயதாகிறது, அல்லது இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து இதைவிட நல்ல இடம், பார்க்கலாம், அதற்குள் பாலனும் வெளிநாட்டிலிருந்து வந்து விடுவான், எப்படியாவது அஞ்சலையிடம் எடுத்து சொல்லி நெலம் விக்கிற விஷயத்தில் அவ மனச மாத்தணும் என பலவாறு எண்ணியபடி தன் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு வீடு நோக்கி சென்றார்
அப்போது செல்போன் ஒலித்தது, “என்ன தம்பி” என்றார் பெரியாண்டி,
“அண்ணா உனக்கும், அண்ணிக்கும் இங்கு குடகுல காபி தோட்டத்தில வேலை சொல்லி வச்சிட்டேன், நிலம் வித்த கையோடு வந்துடுங்க, அதுக்கப்புறம் அங்க இருந்திங்கன்னா மனசு பிஞ்சிப் போயிடும்” என்றார் அவரின் சித்தப்பா மகன்.
“இல்ல தம்பி நெலம் விக்கல, அதுக்கு பதிலா அந்த மண்டப இடம் கட்டலையாம், அந்த இடமும் போகியத்துக்கு வந்துருக்கு அதையும் செஞ்சிப் பார்க்கலாம்னு இருக்கன்டா”
“சரிண்ணா, வேலை கனமா இருந்தா போன் பேசு நானும் வரேன்” என்றார் தம்பி.
பூமிக்கும், மக்களுக்கும், இயற்கை முறையில் நல்லது செய்த பெரியாண்டி, தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை எண்ணித் தன்  வீடு நோக்கி ஆச்சரியத்துடனும், சந்தோஷத்துடனும் சென்றார்.