சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க, கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வியாழக் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.
பின்னர் கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், மாநகராட்சியில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மொத்த இடங்களில் தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக்கூடாது என்று சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சென்னையை பொறுத்தவரை மத்திய பகுதியில் தான் பெண்கள் அதிகம் என்றும், புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியலைமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இருப்பதால், அதை மீறக்கூடாது என அறிவுறுத்தியதுடன், மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும், ஆனால் அது மொத்த வார்டுகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமென கூறி வழக்கை முடித்து வைத்தனர்.