டெல்லி: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக ஏற்கனவே வாக்குப்பதிவு  முடிவடைந்த நிலையில், இன்று காலை  8மணி முதல்  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக முன்னணியில் இருந்தாலும், இறுதி முடிவு, மாநில கட்சிகளின் ஆதரவை பொறுத்தே அமையும் சூழல் உருவாகி உள்ளது. அதனால் அங்கு குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பல முன்னணி தலைவர்கள் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

கோவா மாநிலம் சாங்குலியம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவை சந்தித்துள்ளார். அதுபோல கோவா தலைநகர் பனாஜி தொகுதியில்  போட்டியிட்ட கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலைவ் பின்னணியில் உள்ளார்.

அதுபோல பஞ்சாப் மாநிலத்தில்,  முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட்டும் அவரால் வெற்றி பெற இயலாத நிலையே ஏற்பட்டுள்ளது.  அதுபோல மாநில காங்கிரஸ் தலைவரான கிரிக்கெட் வீரரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் 3-வது இடத்திற்கு சித்து தள்ளப்பட்டார். பஞ்சாப் மாநிலம் மோகா தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா பின்னடைவை சந்தித்துள்ளார். 

மதியம் 12 மணி நிலவரப்படி 5 மாநிலங்களில் கட்சிகள் பெற்றுள்ள முன்னணி நிலவரம் 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில்  பாஜக 267 இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 125 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் முன்னணி யில் இருந்து வருகிறது.

117 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், அங்கு ஆம்ஆத்மி கட்சி 87 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் பாஜக 4  இடங்களிலும, சிரோன்மணி அகாலிதளம் 10 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அங்கு பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22, பிஎஸ்பி 1 இடத்திலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

40தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் மற்றவை 6 இடங்களிலும்  முன்னணியில் இருந்து வருகிறது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது உள்ளது. பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12  இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 10 இங்களிரும் மற்றவை 13 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

கோவா, மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவாவில் சிறிய மாநில கட்சிகள் யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

அதுபோல மணிப்பூர் மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி யாருக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.