சென்னை: தமிழ்நாட்டில் 5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்கப்படும் என தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மதுவிலக்கு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்படும் 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்படும். காந்தி ஜெயந்தியை (அக்.2) முன்னிட்டு ஆண்டுதோறும் அக்.1-ம் தேதி அறிவிக்கப்படும் இந்த விருதானது, குடியரசுத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில், “முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக,
பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம்,
கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,
க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம்,
கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும்
ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம்,
– ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்விருது, முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும் இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.