மும்பை:
மகாராஷ்டிராவில் பாரதியஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், 56 சிவசேனா எம்.பி.க்களில் 45 பேர் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக, பாஜக எம்.பி.சஞ்சய் காகடே (Sanjay Kakade) தெரிவித்து உள்ளார். இது கூட்டணி கட்சிகளிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
288 தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், கூட்டணியாக போட்டியிட்ட பாஜக சிவசேனை கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஆனால், சிவசேனா கட்சியின் 50க்கு 50 சதவிகிதம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனப்படும் பார்முலா காரணமாக இங்கு இரு கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. சிவசேனா கட்சிக்கு துணைமுதல்வர் பதவி தருவதாக பாஜக உறுதி அளித்தும், அதை ஏற்க மறுத்த சிவசேனா, தங்கள் உறுப்பினர் இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை இரு கட்சிகளும் கேட்டு வருகின்றன. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாஜக எம்.பி. சஞ்சய் ககாடே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த 45 எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்.
தேர்தலில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றுள்ள நிலையில், 45 சிவசேனா எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கைகோர்த்து அரசாங்கத்தை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பதாகவும், 56 பேரில், 45 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் எங்களை அழைத்து அரசாங்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்” என்று சஞ்சய் ககாடே கூறியிருப்பது இரு கட்சிகள் இடையே மேலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனக்கும், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் ஃபட்னாவிஸுக்கும் இடையில் 50:50 `ஃபார்முலா ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும், அதையே அமல்படுத்த வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் பாஜகவுக்கு கடந்த வாரம் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.