சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு தடுப்பூசி முகாம்கள் அமைத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதனால் இதுவரை 5 கோடி பேர்வரை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில், தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என தவறான வதந்தி காரணமாக கடந்த தடுப்பூசி முகாமில் குறைவான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வரும் 10-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாமிம் நடைபெறுகிறது. இந்த முறை 30,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.