சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடை முறைகளுடன் அவை தொடங்கியது. அவையின் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து, கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய கேள்வி நேரத்தின்போது, சென்னை திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. தாயகம் ரவி பேசும் போது, நகர்ப்புறநலவாழ்வு மையம் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் , 2021ம் ஆண்டு, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இவற்றில் 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 208 மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.