தேர்தலில் வெற்றிபெற்றால் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 18000 சம்பளம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

2013ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2100, சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை, முதியோர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், டெல்லிவாசிகளுக்கு 24 மணி நேர சுத்தமான குடிநீர் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கும் குருத்வாரா பூசாரிகளுக்கும் (கிரந்தி) மாதம் ரூ. 18000 சம்பளம் வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.