சென்னை: 2013ம் ஆண்டு மாமல்லபுரம் சித்திரை திருவிழாவின்போது, பாமக நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், ஏராளமான அரசுபேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து துறை தொடுத்த வழக்கை எதிர்த்து பாமக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,  இது தொடர்பாக அரசியல் கட்சிகள்மீது கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

பாமக சார்பில் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு திருவிழா நடத்துவது வழக்கம். அதுபோல கடந்த 2013ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பல அரசு பேருந்துகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைக்கு காரணம் பாமக என குற்றம் சாட்டப்பட்டது. பாமக ஒட்டிய போஸ்டரில்,  ”கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது,” ”நாங்க உறையை விட்டு வாள் எடுத்தால், இரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா,” “சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது” என்பன போன்ற சர்ச்சைக்குரிய முழக்கங்கள் காணப்பட்டது. இது மற்றொரு தரப்பினரிடைய கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் அன்றைய விழாவுக்கு வந்த பாமகவினர், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துடன், பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர்.” இதனால் மரக்கணத்தால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துரு,  மரக்காணம் காலனி வீடுகளுக்கும் அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளுக்கும் தனியார் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது.

பாமகவின் இந்த வெறியாட்டத்தில் 2 பேர் இறந்தனர். இதுதொடர்பாக  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பொதுச்சொத்துக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு பாமக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால், பாமக தரப்பில் எவ்வித இழப்பீடும் கொடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பாமகவின் வெறியாட்டத்தால் சேதமடைந்த அரசு பேருந்துகளுக்கு உரிய இழப்பீடு கோரி, போக்குவரத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில்  கடந்த 2014ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு பல்வேறு தடைகளால் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பாமக தரப்பில், அரசின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 2014ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, 2014 ஆம் ஆண்டு பட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும,  பொது சொத்துக்களை சேதப்படுத்தும் அரசியல் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதுபோன்ற விஷயத்தில், முறையான நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும்,  தவறுகளுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.