அகமதாபாத்:
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் அகமதாபாத்தில் நரோடா பாட்டியாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் மர்ம கும்பலால் 96 பேரை கூண்டோடு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாஜ அமைச்சர் மாயா கொட்னானி உள்பட 29 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் பாபு பஜ்ரங்கி என்பவருக்கு சாவும் வரை சிறைத் தண்டனையும், கொட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றாவளிகள் தரப்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஹர்ஷ தேவானி, சுபேஹியா ஆகியோரது முன்னிலையில் நேற்று நடந்தது.
சம்பவம் நடந்த இடத்தை நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற நீதிபதிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட முடிவு செய்துள்ளனர். எப்போது, எந்த நேரத்தில் பார்வையிடுவோம் என்ற விபரங்களை நீதிபதிகள் சரியாக தெரிவிக்கவில்லை.
நேரில் பார்வையிடும் நிகழ்வுக்கு மீடியாக்களுக்கு தடை விதிப்பதற்காக தேதி குறிப்பிடப்படவில்லை. இதை மீடியாக்கள் பதிவு செய்து வெளியிட்டால் நீதித்துறை நடவடிக்கையில் தலையிட்டதாக கருதப்படும்.