சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதல் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில், 2.66 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமும் ஜரூராக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 ஆண்டுக்குள் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் மக்களிடம் வரவேற்பை பெறாத மெட்ரோ ரயில், தற்போது சென்னைவாசிகளின் முக்கிய ரயில் சேவையாக மாறி உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பண்டிகை காலங்களில் சேவைகளை அதிகரித்து வருவதுடன், பயணிகள் எளிதாக டிக்கெட் பெறும் வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது
இந்த நிலையில், பொங்கலையொட்டி, பொதுமக்கள் வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம், ரயில்நிலையங்களுக்கு செல்ல கடந்த 13 ஆம் தேதி மட்டும் சுமார் 2.66 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 13.607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில்களில் ஜனவரி 13, 2023 முதல் ஜனவரி 17,2023 வரை பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை பொறுத்தவரை, 13ஆம் தேதி 2.66 லட்சம் பேரும், 14 ஆம் தேதி 1ழ62 லட்சம் பேரும், 15ஆம் தேதி 1.08 லட்சம் பேரும், 16ஆம் தேதி 1.34 லட்சம் பேரும், 17ஆம் தேதி 1.65 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.