டெல்லி: ஈரானில் இருந்து மேலும் 195 இந்தியர்கள், ஜெய்சால்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர்.

சீனாவில் தோன்றி உலக நாடுகள் பெரும்பாலானாவற்றில் பரவியிருக்கும் கொரோனா வைரசானது, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களாக, அங்கு வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது அந்நாட்டு மக்களை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஈரானில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக ஈரான் அறிவித்தது.

இந்நிலையில் ஈரானில் இருந்து மேலும் 195 இந்தியர்கள், ஜெய்சால்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து அந்த முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்திருக்கிறது.

அவர்களுக்கு என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த நாரவனே நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் குறிப்பிட்ட அடி தூரத்தில் இருந்தபடியே அவற்றை பார்வையிட்டார். மேற்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகள் பற்றி ஆய்வின் போது அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.