கனடாவில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளம்பெண் ஜெஸ்சி வான் ரூட்சலார் (Jesse Van Rootselaar) என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தொலைதூர நகரமான டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ராயல் கனடியன் மவுண்டெட் போலீஸ் (RCMP) துணை ஆணையர் டுவெய்ன் மெக்டொனால்டு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஜெஸ்சி வான் ரூட்சலார் குடும்பத்துடன் தொடர்புடைய பல போலீஸ் விசாரணை பதிவுகள் உள்ளன. அவற்றில் சில மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை,” என்று கூறினார்.

ஜெஸ்சி, மாகாண மனநலச் சட்டத்தின் கீழ் பல முறை மனநல பரிசோதனைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், ஜெஸ்சி பிறப்பில் ஆணாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அதே பள்ளியில் முன்பு படித்தவர் என்றும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு செல்வதற்கு முன்பு, தனது வீட்டில் தாய் (39) மற்றும் 11 வயது தம்பியை கொலை செய்துவிட்டு, அதன் பின்னரே பள்ளிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில், 39 வயது ஆசிரியர் ஒருவர், 12 வயதான மூன்று பெண் மாணவிகள், மேலும் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு ஆண் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த போலீசார், துப்பாக்கிச் சூடு தொடர்பாக முதல் தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களுக்குள் போலீசார் பள்ளிக்கு சென்றதாக கூறியுள்ளனர்.
அப்போதும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்த நிலையில், போலீசாரை நோக்கியும் குண்டுகள் பாய்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஜெஸ்சி தானே சுட்டுக் கொண்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து ஒரு நீளமான துப்பாக்கி மற்றும் ஒரு கைத் துப்பாக்கியை மீட்டதாகக் கூறிய போலீசார், “இந்த தாக்குதலை ஜெஸ்சி தனியாகவே நடத்தியுள்ளார். அதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]