சென்னை
நேற்று தமிழகத்தில் நடந்த 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 17.19 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மூன்று கட்ட தடுப்பூசி முகாம்கள் நடந்து நேற்று 4 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன.
தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26-ம் தேதி 23 ஆயிரங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று தமிழகத்தில் 4ஆம் கட்ட தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடந்துள்ளது.
நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று நடந்தது. இதில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
நேற்று தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நேற்றைய 4 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் சென்னையில் 1.50 லட்சம் உட்படத் தமிழகம் முழுவதும் நேற்று17.19 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன
சிறப்பு முகாம்களில் பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது.