பெங்களுரு
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பேருந்துகட்டணங்கள் 15% உயர்த்தப்பட உள்ளன.
கர்நாடகாவில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகம், வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகம் என 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மூலம் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெங்களூருவில் மட்டும் 6 ஆயிரத்து 500 பேருந்துகள் போக்குவரத்து சேவையில் உள்ளன.
கடைசியாக இந்த பேருந்துகளின் கட்டணம் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. டீசல் விலை பல முறை உயர்ந்ததால் பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு அந்த போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. ஆயினும் மக்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்பதால் எந்த கட்சியின் அரசும் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவில்லை.
தற்போது கர்நாடக அரசு பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்க சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி செலவாகி வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தங்களின் ஊதியத்தை உயர்த்துமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த 4 போக்குவரத்து கழகங்களும், பேருந்து கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயா்த்தியே ஆக வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தன. நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு4 போக்குவரத்து கழகங்களும் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்திக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பேருந்து கட்டணம் முதல் 2 கிலோ மீட்டர் வரை பொருந்தும். பேருந்து கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டண உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அரசை கண்டித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.