சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக திமுகஅரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், கடந்த மாதம், பிரதமர் மோடியை அழைத்து கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை நடத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவர் மீதான 2015-ம் ஆண்டு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் பிஆர்பாண்டியன் உள்பட சிலருக்கு 13 ஆண்டுகள் தண்டனை விதித்துஉத்தரவிட்டது. இந்த தண்டனையும் விவாதப்பொருளாக மாறியது. திமுக அரசை எதிர்த்து செயல்பட்டதால்தான், அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சாடினர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தி்ல் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
[youtube-feed feed=1]