டெல்லி: வரும் 17ம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற, அயோத்தி வழக்கு, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவைகளில் என்ன தீர்ப்பு வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சய் கோகோய். வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனை தொடர்ந்து மரபுப்படி, அடுத்த நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க பரிந்துரைத்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக பாப்டேவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து ஒப்புதல் அளித்துள்ளார். வரும் 18ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாப்டேவுக்கு பதவி பிராமணம் செய்து வைக்கிறார் ராம்நாத் கோவிந்த்.
ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற குறுகிய காலமே உள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் 10 வேலைநாட்கள் தான். அந்த நாட்களுக்குள் அவர் அதி முக்கியத்துவம் வாய்ந்த 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
அதில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு தான். 40 நாட்கள் இடைவெளி இல்லாமல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. முழுமையான விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பு முன்னரே உஷார்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அயோத்தியில் டிசம்பர் 10 வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக கருதப்படும் வழக்கு, ரபேல் விவகாரம் தொடர்பானது. இது குறித்த அனைத்து வழக்குகளை கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரஷாந்த் பூஷன் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பும் ரஞ்சன் கோகோயின் கைகளில் தான் இருக்கிறது.
இதே போன்று மற்றொரு வழக்கின் தீர்ப்பும் எப்படி இருக்கும் அனைவரும எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வழக்கு சவுக்கிதார் விவகாரம். பாஜகவின் மீனாட்சி லேகி, ராகுல் காந்திக்கு எதிராக தொடுத்த கிரிமினல் வழக்கு.
அடுத்து சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா வழக்கு என முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. இந்த வழக்குகளில் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் சவாலான பணிதான் என்று பிரபல சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.