ரியாத்:
வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளம்பெணை இன்னும் சில நாட்களில் தலை துண்டித்து கொல்லப்போகிறது அந்நாட்டு அரசு. ஆனால் இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் தெரிவிக்கின்றன.
திருமணமான இலங்கையை சேர்ந்த இளம்பெண் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்தார். சவுதியியில் பணிபுரியும் மற்றொரு இலங்கை தொழிலாளியுடன் அவர் உறவு வைத்திருந்ததாக சவுதி போலீசார் குற்றம் சாட்டினர். மேலும் அந்த பெண் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சவுதியில் கடைபிடிக்கப்படும் இஸ்லாமிய சட்டப்படி அந்த தொழிலாளிக்கு 100 சவுக்கடி வழங்கப்பட்டது. அதே நேரம் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை என்றால் சாதாரணமான வகையில் அல்ல. அவரது உடல் முழுவதும் ஒரு குழியில் புதைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் தெரியும் அவரது தலையை மக்கள் முன்னிலையில் வெட்டி வீச உத்தரவிடப்பட்டுள்ளது.
“தண்டனை” என்ற பெயரில் இந்த கொடூரம் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
இந்த கொடூர தண்டனையில் இருந்து அவரை காப்பாற்ற லங்கை அரசு ரியாத் நீதிமன்றத்தில் எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை.
தூதரக அளவிலான இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் இலங்கை அரசு அந்த முயற்சியை எடுக்கவில்லை.
மரணத்தை எதிர்நோக்கியுள்ள அந்த பெண் சவுதியில் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள சட்டரீதியான நடைமுறைக்கு பத்தாயிரம் ரியால் அல்லது 2 ஆயிரத்து 600 டாலர் தேவைப்படும். இந்தத் தொகைதான் ஒரு வெளிநாட்டு தொழிலாளியின் ஒரு ஆண்டு வருமானம் ஆகும். தவிர அரபி தெரியாத அந்த பெண்ணுக்கு தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த அளவுக்கு விபரம் தெரிந்தது என்பதும் புரியவில்லை.
இந்தியா போன்ற நாடுகளில் கொடூர குற்றவாளிகளுக்கு கூட தூக்கு தண்டனை நிறைவேற்ற பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருக்கிறது. ஆனால் அப்பாவி பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கொடூர தண்டனையை உலகம் கண்டுகொள்ளவில்லை.
இதற்கு முன் 2013ம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பொதுவாகவே அரபு நாடுகளில் பணியுபுரியும் வெளிநாட்டு பெண்களுக்கு பல கொடுமைகள் நடக்கின்றன.
“அரபு நாட்டில் பணிபுரியும் பெண்கள், தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால் வேலை அளித்தவரிடம் விசா பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதனால் முதலாளிகள் பெண் தொழிலாளிகளை பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு பெண்கள் மீதான கற்பழிப்பு, மிரட்டல் போன்ற புகார்கள் அதிகம் வெளி வருவதில்லை.
ஆனால் போலி விபச்சார குற்றச்சாட்டுகள் எளிதாக சுமத்தப்படுகிறது.
ஆனால் மனித உரிமை பற்றி பேசும் அமெரிக்க அரசு இலங்கை பெண் மீதான மரணதண்டனை தீர்ப்பு குறித்து அக்கறை செலுத்தவில்லை. மனித உரிமை கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் சவுதி தற்போது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையை சேர்ந்த 125 பெண்கள் உள்பட 250 பேர் சவுதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 150 பேர் காவல் நிலையங்கள், முகாம்களில் வழக்கு விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக சவுதி அரேபிய அரசின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள இலங்கை விரும்பவில்லை. சவுதி உட்பட அரபு நாடுகளில் பணி புரியும் இலங்கை தொழிலாளர்களின் அந்நிய செலாவணிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதிலேயே இலங்கை கவனமாக இருக்கிறது. அதே போல அமெரிக்காவும், சவுதி உடனான வர்த்தக எண்ணை ஒப்பந்தங்களிலேயே அக்கறை காட்டுகிறது.
அதே நேரம் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் அந்நாட்டு சட்டத்தை மீறி செயல்பட்டாலும் தண்டிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், சவுதி இளவரசர் அப்துல் மோஹ்சன் பின் வாலித் பின் அப்துல் அஜிஸ் , தனது அமெரிக்க வீட்டில் வைத்து ஓரினச் சேர்க்கையில் பலாத்தாரமாக ஈடுபட முயன்றார்.
இரு பெண்களுடனும் மிரட்டி உறவு கொள்ள முயன்றார். பிறகு காவல் துறைக்கு தகவல் தெரிந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த மாதம், அவர் பயணம் செய்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது 2 டன் அளவுக்கு கேப்டகன் என்ற வர்த்தக பெயர் கொண்ட ஆம்பிடமனி பெனிதில்லின் என்ற போதைப்பொருள அவர் கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டாலும் விரைவில் விடுதலை செய்யப்பட்டார்.
வெளிநாடுகளிலேயே இந்த அளவுக்கு கொடூரமாக சட்டத்தை மீறி நடக்கும் இளவரசர், தனது சவுதி நாட்டில் எப்படி செயல்படுவார் என்பது அனைவரும் எளிதாக யூகிக்க கூடியதே. ஆனால் அவர் மீது சவுதியில் எந்த ஒரு வழக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.