சங்கரன்கோவில்: பிளஸ்2 படிக்கும் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரம் தொடர்பாக,  தென்காசி மாவட்ட திமுக பிரமுகருக்கு,மாணவியின் உறவினர்கள் வீடு புகுந்து  சரமாரியாக அடித்து உதைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சோமசெல்வப் பாண்டி. இவர் தென்காசி மாவட்ட திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைச் செயலாளராகவும் உள்ளார். இவர் குடும்பத்தை விட்டு, தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாக சில ஆண்டுகளாக  உணவு சாப்பிட்டு வரகிறார். அதனால்,  உணவகத்தை நடத்தி வரும் குடும்பத்தினருடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த உணவக உரிமையாளரின் பிளஸ்2 படிக்கும் மகள், சோமசெல்வப் பாண்டியை உறவினராக நினைத்து பழகி வந்துள்ளார்.  ஆனால், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய சோமசெல்வபாண்டி, அந்த மாணவியின் மொபைல் போனுக்கு கடந்த சில நாட்களாக ஆபாசப் படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில், இது ஏதோ தவறாக வந்திருக்கும் என்று எண்ணிய அந்த மாணவி,அதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.  ஆனால், தொடர்ந்து படங்களை அனுப்பி வைக்கவே, அவர் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், சோமசெல்வப் பாண்டி வீட்டிற்கே சென்று அவரை சரமாரியாக அடித்துள்ளனர். அந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சங்கரன்கோவில் வட்டாரத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சோமசெல்வப் பாண்டி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.