சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் சுமார் ஓராண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்த அசோக்குமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அவர் அசோக்மீதான சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் ஆஜராகி இருந்தார்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அசோக்குமார், கார்த்திகேயன், அனுராதா ரமேஷ் ஆகியோர் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.17-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[youtube-feed feed=1]