ஜோனாதன்
ஜோனாதன்

பைபிள், திருக்குறளுக்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பாலான மொழிகளில் காணக்கிடைப்பவை, இஸ்ரேலிய உளவுத்துறையின் திருவிளையாடல்கள்தான். மொசாட் எனப்படும் அந்த உளவுத்துறைக்கு உலகம் முழுதும் கண்கள்.. அதாவது உளவாளிகள் உண்டு.

வெளிநாட்டு விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக்கப்பட்ட தனது நாட்டு விளையாட்டு வீரர்களை மொசாட் மீட்டது ஒரு புல்லட் உதாரணம்.

அது மட்டுமல்ல.. மொசாட்டை பொறுத்தவரை, நட்புநாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தனக்கு ஆயுத வரம் கொடுக்கும் அமெரிக்காவும் அது விட்டுவைப்பதில்லை.

அப்படித்தான் அமெரிக்க கடற்படை உளவுத்துறை அதிகாரியான ஜோனாதன் பொல்லார்ட் என்பவரை தன் பக்கம் இழுத்தது இஸ்ரேலிய உளவுத்துறை. அவர் மூலம் பலவித அமெரிக்க ரகசியங்களை அறிந்தது.

ஜோனாதன் மீது, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை தொடர்ந்து கண்காணித்தது. வடக்கு கரோலினாவில் இருக்கும் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை திருடி, இஸ்ரேல் உளவாளியிடம் கொடுத்த ஜோனாதனை, கையும் ஃபைலுமாக பிடித்தது சி.ஐ.ஏ.!

கைது செய்யப்பட்ட ஜோனோதனுக்கு அமெரிக்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

ஜோனாதனை விடுவிக்கும்படியும், அவரை தங்களது நாடான இஸ்ரேலுக்கு அழைத்துக்கொள்வதாகவும் இஸ்ரேலிய அரசு கூறியது. இதற்கு அமெரிக்க அரசு பதில் ஏதும் சொல்லவில்லை.

இதற்கிடையில் ஜோனாதனும், “நான் அமெரிக்க குடியுரிமையை துறந்து, இஸ்ரேலுக்கு செல்ல விரும்புகிறேன். என்னை விடுவியுங்கள்” என்று அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தார். திரும்பவும் மவுனமே பதிலாக கிடைத்தது.

ஆனாலும் இஸ்ரேல், தனக்காக உளவு பார்த்தவரை.. அவர் அமெரிக்கரானாலும்.. விட மனமில்லாமல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்னயாகு உளவாளி ஜோனாதனை விடுதலை செய்து தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தார்.

 

பெஞ்சமின் நேத்னயாகு, ஒபாமா
பெஞ்சமின் நேத்னயாகு, ஒபாமா

இந்த நிலையில் ஜோனாதன் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இதை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் நேத்னயாகு, தங்கள் நாட்டுக்கு ஜோனாதன் குடியேற விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தனது உளவாளி கைது செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளானாலும் தொடர்ந்து அவரது நிலையை கண்காணித்து, அவர் வேற்று நாட்டவரானாலும் தன் நாட்டில் குடியுரிமை அளித்து வாழ அழைத்து… இஸ்ரேல் தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் இதற்கு நேரெதிராக நடக்கிறது. இதற்கு ஒரு சோக சாட்சி கவுசிக்.

கவுசிக்
கவுசிக்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்த கவுசிக் தேசபக்தி மிகுந்தவர். கி.பி.1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது, கல்லூரி மாணவராக இருந்த கவுசிக், தேசபக்தியை வலியுறுத்தும் நாடகங்களை நடத்தினார். அந்த நாடகங்களில் கவுசிக் ஏற்றிருந்த வேடம், உயிரே போனாலும் தேசத்தைக் காட்டிக்கொடுக்காத ஓர் உளவாளி!

இவரது நாடகங்களைப் பார்க்க வந்த ராணுவ அதிகாரிகளுக்கு கவுசிக்கின் நடிப்புத் திறமையும், தேசபக்தியும் பிடித்துப்போனது.

அவரை, இந்தியாவின் ஒற்றராக பாகிஸ்தானுக்குள் அனுப்பினார்கள். தேசத்துக்கா சென்றார் கவுசிக். புது டெல்லியிலிருந்து அபுதாபி,துபாய் என சுற்றி கடைசியாக பாகிஸ்தான் வந்தார் கவுசிக். நபி அஹமத் என்று பெயரை மாற்றிக்கொண்டு அங்கே சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். ஒரு பாகிஸ்தானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானியராகவே வாழ்ந்த அவர் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

அங்கே இருந்து கொண்டு, இந்திய ராணுவத்திற்குப் பல முக்கியமான தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். அவை இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்தன.

ஒரு முறை இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த் இன்னொரு ஒற்றரை, பாகிஸ்தானை விட்டுப் பத்திரமாக வெளியேற்றிவைக்க இந்திய ராணுவத்திலிருந்து அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டது. எதிர்பாராத விதமாக,அந்த இந்திய ஒற்றன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்தின் சித்திரவதையைத் தாங்கமுடியாத அவர், கவுசிக் பற்றிய உண்மைகளை கூறிவிட்டார். சிக்கினார் கவுசிக்.

கவுசிக்குக்கும் பல்வேறு சித்திரவதைகள். விசாரணை முடிந்து மொத்தம் 19 ஆண்டுகள் பாகிஸ்தானின் முல்டான் சிறையில் கழித்தார். அப்போதும் சித்திரவைதைகள் தொடர்ந்தன.

அங்கேயே மடிந்தார். ஆனால் இந்திய அரசு கவுசிக் பற்றி மூச்சுவிவடவே இல்லை.

கிருஷ்ணா தர் என்பவர், “மிஷன் டு பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தினை என்பவர் எழுதி வெளியிட்டார். கவுசிக்கின் வாழ்க்கையை அதில் எழுதப்பட்டிருந்தாலும், கவுசிக்காதான் என்பதை கிருஷ்ணா தர் குறிப்பிடவே இல்லை.

2002 ஆம் வருடம் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அஹமத் என்ற பெயரில் இறந்துபோனார் கவுசிக். இதை இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடுதான் வெளிப்படுத்தியது.

கவுசிக் தன் தாய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில், “நான் இதே வேலையை அமெரிக்காவுக்காகச் செய்து இருந்தால், கைது செய்யப்பட்ட மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன்” என்று மனம் நொந்திருந்தார்.

அதன் பிறகு கவுசிக்கின் தாய்க்கு மாதாமாதம் உதவித் தொகை அனுப்பி வைக்கிறது இந்திய அரசு. அது எவ்வளவு தெரியுமா?

ஐநூறு ரூபாய்!