Srikanth srinivasan
ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமன வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள  கொலம்பியா மாவட்டத்தின் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள தமிழரான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்புள்ளோர் பட்டியில் இடம்பெற்றுள்ளார். ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர். தாய் சென்னையைச் சேர்ந்தவர்.
முக்கியப் பதவி நியமனங்களுக்கு முந்தைய நடைமுறையாக, ஸ்ரீகாந்த், ஜாக்சன் ஆகியோரின் பின்னணி குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. ரகசிய விசாரணையைத் தொடங்கிவிட்டது. எனினும், மேலும் இரு நீதிபதிகளின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதால், ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் வரும் நவம்பர் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு பதவிக்கு வரும் புதிய அதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
வாய்ப்புள்ளோர் பட்டியலில் உள்ள ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், வெளிப்படையாக ஜனநாயக் கட்சியுடன் அடையாளப்படுத்தப்படுபவர் என்றாலும், அவருக்கு குடியரசுக் கட்சியினரின் ஆதரவு உள்ளது என்று கூறப்படுகிறது.