சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்கி வரும் சூழலில் மதிமுகவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி திமுகவில் இணைவது தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு ஆரம்பித்துவைத்த சமீபத்திய விலகல் டிரண்டை, தொடர்ந்தனர் சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி. இன்று அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் பொருளாளர் மாசிலாமணி.
விலகும் அனைவருமே சொல்லும் குற்றச்சாட்டின் சாராம்சம் இதுதான்:
“திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் சில எம்.எல்.ஏ.க்களாவது மதிமுகவுக்கு கிடைப்பார்கள். ஆனால் சிறிய கட்சிகளுடன் இணைந்து, வைகோ அமைத்திருக்கும் ஐந்து கட்சி கூட்டணியை வைகோ விடுவதாய் இல்லை!”
இவர்கள் மேலும் கூறுவது, “சட்டமன்றத் தேர்தல் என்றாலே வைகோ குழம்பிவிடுகிறார். திமுகவுடன் சேர்ந்து அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார். தற்போது கூட மதிமுக திருப்பூர் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதை திமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை மதிமுக சந்திக்கவில்லையா?
தற்போது அவர் ஏற்படுத்தி இருக்கும் ஐந்து கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது ஆண்டிகள் மடம் கட்டிய கதைதான்.
ஏனென்றால் அதிமுக அரசின் செயல்பாடுகள் சரியில்லாத போதும் நடுத்தர மக்களிடம் மட்டுமே அக் கட்சிக்கு எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களிடம் அதிமுகவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது.
அந்த அடிமட்ட மக்கள்தான் தவறாமல் வாக்களிக்க வருகிறவர்கள். தேர்தல் நேரத்தில் அவர்களை எப்படி வசீகரிப்பது என்பது அதிமுகவுக்கு கைவந்த கலை.
ஆகவே அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைந்தால்தான் வெற்றி பெற முடியும். அதற்கு திமுக தலைமையில அனைத்து கட்சிகளும் அணிவகுக்க வேண்டும்.
தவிர தேர்தல் நெருக்கத்தில் நமது முடிவை வெளியிடாமல் வைத்துக்க வேண்டும். அப்போதுதான் மரியாதை. ஆனால் வைகோ இப்போதே தனது கூட்டணி பற்றி அறிவித்துவிட்டார்.
இதெல்லாம் சாதராண தொண்டனுக்கே தெரிகிற விசயம். வைகோவுக்கு தெரியாதா?
இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று அவர் நினைப்பதாகவே தெரிகிறது. 2001 மற்றும் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களின் போதும் திமுகவுடன் நெருங்குவதாக ஒரு பிரேமையை ஏற்படுத்தினார். பிறகு விலகினார். இந்த முறையும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவை மிக அவமானப்படுத்தியது அதிமுக. அதற்காகவாவது அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும். இதைச் செய்யாதது அவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள்.
ஆனால் வைகோவின் தீவிர தொண்டர்கள் கருத்து வேறுமாதிரி இருக்கிறது.
“தமிழகத்தை சீரழிக்கும் அதிமுக, ஈழப்போரின்போது துரோகம் செய்த திமுக ஆகிய இரண்டுமே வேண்டாம் என்ற வைகோ முடிவெடுத்திருக்கிறார். அதுதான் சரியான முடிவு.
கட்சியிலிருந்து சில நபர்கள் வெளியேறுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது. திருப்பூரில் செல்வாக்குடன் திகழ்ந்த சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, சுமார் .ஐம்பதாயிரம் தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார். ஆனால் அடுத்து வந்த தேர்தலில்
தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோற்று போனார்.
மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக சளைக்காமல் போராடி வரும் ஒரே தலைவர் வைகோதான். வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்கிறார்கள்.
ஆனால் வைகோவை விமரிசிப்பவர்கள், கருத்து வேறாக இருக்கிறது:
“மக்கள் நலனுக்கான போராட்டங்களை தொடர்ந்து வைகோ முன்னெடுக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் இது வாக்குகளாக மாறுமா என்பது முக்கியமான கேள்வி.
தொண்டர்கள் வேண்டுமானால், “யார் வேண்டுமானாலும் போகட்டும்” என்று கருதலாம்.
ஏற்கெனவே அவைத்தலைவராக இருந்த எல். கணேசன், கண்ணப்பன் முதற்கொண்டு பலரும் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இப்படி கட்சி பொறுப்பாளர்களை தொடர்ந்து இழப்பது என்பது ஒரு அரசியல் கட்சிக்கு நல்லதல்ல” என்கிற இவர்கள், “மக்கள் நல போராட்டங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோ தனது கட்சியை வளர்க்க தரவில்லை என்றே தோன்றுகிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மக்கள் போராட்டத்துக்காக சென்றிருக்கிறார். ஆனால் தனது கட்சியை கட்டமைக்க எத்தனை கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார் என்பது கேள்வியே. தவிர தனக்கு அடுத்தபடியான தகுதியானவர்களை உருவாக்கும் பணியையும் அவர் செய்யவில்லை.
கட்சிக்காக தினசரி என்று, கட்சித்தொண்டர்களிடம் நிதி வசூலித்துக்கொடுத்தார். அந்த தினசரி சில நாட்களாக வருவதாக விளம்பரங்கள் வருகின்றனவே தவிர தினசரி வருவதாக தெரியவல்லை.
அதை யார் பொறுப்பில் விட்டிருக்கிறாரோ, அவர் கட்சியின் முக்கிய கூட்டங்களுக்கு வருவதே இல்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது, கட்சியை விட மக்கள் போராட்டங்களுக்கு வைகோ முக்கியத்துவம் கொடுப்பது தெரிகிறது. அது நல்லதுதான். ஆனால் அதை வெளிப்படையாக, “இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம். மக்கள் பிரச்சினைக்கான போராட்டங்கள் தொடரும்” என்று அறிவித்துவிடலாம்.
இந்த நிலையில் திமுகதான் வலைவீசி இழுக்கிறது என்று குற்றம் சாட்டுவது அறிவுடமை ஆகாது. இழுத்தால் போய்விடும் அளவுக்கு முக்கிய நிர்வாகிகளை வைத்திருக்கிறார் வைகோ என்பதுதானே உண்மை” என்கிறார்கள்.
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மட்டுமல்ல.. தற்போது கட்சியில் இருப்பவர்கள் பலருக்கும் இதே எண்ண ஓட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
திருப்பூர் மதிமுக மாநாட்டில் முன்னாள் எம்.பி. ஈஸ்வரமூர்த்தி பேச்சும் கவனிக்கத்தக்கது.
“வாக்களிக்கத் தெரியாத மக்கள், கூட்டணி அமைக்கத் தெரியாத கட்சிகள், இதெல்லாம் இன்றைய ஜனநாயகத்தின் அவலம். நம் கட்சி முன்னெடுக்காத போராட்டங்களே இல்லை. மிகவும் விசுவாசமான தொண்டர் பலமும் இருக்கிறது. ஆனாலும் ஏதோ குறையிருக்கிறது” என்றார் அவர். தொடர்ந்து பேசிய ஆர்.டி மாரியப்பனும் இதை வழிமொழியும் வகையில் பேசினார்.
இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட செயலர் டாக்டர் சரவணன் சைலண்ட்டாக மதிமுகவிலிருந்து விலகிவிட்டார் என்கின்றன செய்திகள்.
இதே போன்ற விலகல்கள் நடந்தபோது ஒருமுறை வைகோ “தேவையற்றவை செதுக்கி விலக்கப்படும்போதுதான் அழகான சிற்பம் உருவாகும்!” என்கிற ரீதியில் பேசினார்.
மதிமுக செதுக்கப்படுகிறதா.. சிதைகிறதா… காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
– அகிலன் பரந்தாமன்