201602070551078024_AIADMK-Police-Assistant-Commissioner-of-Police-in-the-region_SECVPFசென்னை,
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட  சென்னை மதுவிலக்கு போலீஸ் உதவி கமிஷனர் பீர்முகமது,  விருப்பமனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர், “பணியிலிருந்து  விருப்ப ஓய்வு பெற கடிதம் அனுப்பிய பிறகே, அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்களிடம்து கடந்த மாதம் 20–ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது.
சென்னை மதுவிலக்கு உதவி கமிஷனராக இருக்கும்  பீர் முகமதுவும், திருவல்லிக்கேணி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய பீர்முகமது, “சிவகங்கை மாவட்டம் மானாமதுரைதான் எனது சொந்த ஊர்.   அ.தி.மு.க. உதயமானதில் இருந்தே அக்கட்சியில் எங்கள் குடும்பம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது.   எனது அண்ணன் சுல்தான் அலாவுதீன், திருப்பூரில் அ.தி.மு.க. பகுதி செயலாளராக இருந்திருக்கிறார். காவல்துறை பதவிக்கு வரும் முன் நான் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனாக இருந்திருக்கிறேன்.. வரும் தேர்தலில் போட்டியிட. நிச்சயம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
“அரசு பணியில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிப்பது, தவறு” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இன்று பீர்முகமது, “காவல்துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்த பிறகே, விருப்ப மனு தாக்கல் செய்தேன்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், “பீர்முகமதுவின் விருப்ப ஓய்வு குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆக, தற்போதும் அவர் அரசுப்பணியாளர்தான். ஒருவேளை அவரது விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அடுத்த இரு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பது அரசு விதி.  ஆகவே பீர்முகமது அப்பட்டமாக அரசு விதிகளை மீறியிருக்கிறார். அவர் மீது, காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.