1
காஞ்சிபுரம்: விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். பிறகு எப்படி என் கட்டுப்பாட்டில் தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டுவை அடுத்த மாமண்டூரில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.
பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
“நாங்கள் பணத்துக்கு என்றுமே அடி பணிய மாட்டோம். எங்கள் கூட்டணி தலைவர்கள் அனைவரும் கரைபடியாதவர்கள். ஆனால், திமுக, அதிமுக கட்சியினரை கரைபடியாதவர்கள் என்று கூறமுடியுமா?
டாஸ்மாக் கடைகளை அகற்ற முடியாது என்று அதிமுக அமைச்சர் கூறினார். தற்போது முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்.  மத்திய அமைச்சர்கள் கூட சந்திக்க முடியாத முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார்.
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு எங்கள் கூட்டணி ஆட்சி அமையும்.
சிலர் அண்ணி எனக் கூறி வஞ்சகம் செய்துவிட்டனர். விஜயகாந்த் என் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கட்சியையும் நான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். பிறகு எப்படி என் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கும்?” என்றார் பிரேமலதா.