மு.க.ஸ்டாலின் ஒரிஜினல்  முதல்வர் வேட்பாளர்: பாலவாக்கம் சோமு
மு.க.ஸ்டாலின் ஒரிஜினல் முதல்வர் வேட்பாளர்: பாலவாக்கம் சோமு

ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பல வருடங்கள் இருந்த பாலவாக்கம் சோமு, “அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வைகோ செயல்படுகிறார். அதற்காகத்தான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார்” என்று குற்றம் சாட்டி தி.மு.கவில் இணைந்தார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவரிடம் பேசினோம்.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருப்பது வைகோவுக்கு கிடைத்த வெற்றி தானே?
விஜயகாந்துக்கு மக்கள் செல்வாக்கு இருக்காது. இப்போது அவருக்கு மூன்று சதவிகித ஓட்டு இருக்குமா என்பதே சந்தேகம்தான். மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கும் சேர்த்து ஐந்து சதவிகித ஓட்டு இருக்கும்.  மொத்தம் எட்டு சதவிகித ஓட்டுக்களை வைத்து எத்தனை தொகுதியில் டெபாசிப் பெறுவார்கள்? இதில் என்ன வைகோவுக்கு வெற்றி?
விஜயகாந்துக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றால் அவரை தி.மு.க. வருந்தி வருந்தி அழைத்தது ஏன்?
வருந்தி வருந்தி யாரும் அழைக்கவில்லை. தேர்தலில் கூட்டணி என்பது இயல்பான விசயம். தி.மு.க. என்பது பெரிய கட்சி. அதனுடனுடன் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்திருக்கின்றன. இன்னும் சில கட்சிகள் சேரலாம். அப்படி ஒரு கட்சியாக தே.மு.தி.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வளவுதான்.
ஆக, தே.மு.தி.க. வந்தும் ம.ந.கூட்டணிக்கு பலனில்லை என்கிறீர்களா?
ஆமாம். அதான் எதார்த்தம். நான் பல வருடம் ம.தி.மு.க.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்தவன்.  ம.தி.மு.க. சார்பாக ஏதாவது கூட்டம், போராட்டம் என்றால் தொண்டர்களை திரட்ட நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். தொண்டர்களே கிடையாது என்றே சொல்லலாம். இப்போது மக்கள் நலக்கூடணியில் இருக்கும் கட்சிகளில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகளுக்கு ஏதோ கொஞ்சம் தொண்டர் பலம், ஓட்டு இருக்கும். ம.தி.மு.க. கதையைத்தான் சொல்லிவிட்டேன். அதே போலத்தான் இரண்டு கம்யூனிஸ்டுகளும். இந்த நிலையில் அந்த கூட்டணியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது!
விஜயகாந்திடம் 500 கோடி வரை பேரம் பேசியது திமுக என்று வைகோ கூறியிருக்கிறாரே..!
அவருக்கு தி.மு.க. என்றாலே ஆகாது. அதுவும் கலைஞர், தளபதி என்றால் சுத்தமாக அவருக்கு பிடிக்காது. நான்  அந்த கட்சியை விட்டு பிரியும் முன் நடந்த  மாவட்ட செயலாளர் கூட்டத்தில், “நாம வைக்கிற கூட்டணியால அ.தி.மு.க. ஜெயிக்கும் என்றால் பரவாயில்லை. தி.மு.க. தோற்க வேண்டும். அவ்வளவுதான்” என்றார் வைகோ. அந்த அளவுக்கு அவருக்கு தி.மு.க., கலைஞர், தளபதி என்றாலே ஆகாது.
ஆகவே வேண்டுமென்றே தி.மு.க. மீது புழுதி வாரி தூற்றும் வேலையைச் செய்கிறார் வைகோ. இப்போது அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவரால் பதில் சொல்ல முடிகிறதா பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் ம.ந.கூட்டணி டெபாசிட் வாங்குவதே கஷ்டம் என்கிற தொணியில் பேசுகிறீர்கள். அதில் அங்கம் வகிக்கும்… உங்கள் முன்னாள் கட்சியான ம.தி.மு.கவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
(சிரிக்கிறார்) ம.தி.மு.க.வுக்கு நிகழ்காலமே கிடையாது.  அதனால்தானே என்னைப்போல உழைக்கும் தொண்டர்கள் பலர் வெளியேறினோம். அந்த கட்சிக்கு எதிர்காலம் வேறா?
கே: அன்புமணி, விஜயகாந்த் என்று நிறைய பேர் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்களே..!
அன்புமணி தனியாக வலம் வருகிறார். விஜயகாந்த் நாலுபேரை உடன் வைத்துக்கொண்டு வலம் வருகிறார். அவ்வளவுதான்.
மற்றபடி எங்கள் தளபதி அவர்கள்தான் ஒரிஜினல் முதல்வர் வேட்பாளர். மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க தமிழகம் முழுதும் வலம் வந்தார். அது மட்டுமல்ல.. அரசியல் என்றாலே லஞ்ச ஊழல் இருக்கத்தான் செய்யும்.  ஆனால் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தளபதி, “எங்களது முந்தைய ஆட்சியில் குறைகள் இருந்திருக்கலாம். இனி இருக்காது” என்று மக்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறார். இப்படி வெளிப்படையாக அவர் பேசியது மக்களுக்கு பிடித்திருக்கிறது. ஆகவேதான் சொல்கிறேன்.. தளபதி அவர்கள்தான் ஒரிஜினல் முதல்வர் வேட்பாளர்.