vaiko angry
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில், காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தால் சோழ மண்டலம் பாலைவனமாகும் என்ற ஆபத்தை உணர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகளை தட்டி எழுப்பினார். மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
காவிரி டெல்டா விவசாயிகளும், பொதுமக்களும் போராடியதால், மீத்தேன் வாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், மீத்தேன் எரிவாயு திட்டத்தை முழுமையாக திரும்பப் பெறவில்லை. இந்நிலையில், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை விட ஆபத்தான ‘பாறை எரிவாயு’ எனும் ‘ஷேல் கேஸ்’ காவிரி டெல்டாவில் 9 இடங்களில் எடுப்பதற்கு மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காவிரி டெல்டாவில், ஏற்கனவே கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி பெற்ற 5 இடங்களில் முதல் கட்டமாக ஷேல் கேÞ ஆய்வுக் கிணறு அமைக்கும் நடவடிக்கைகளை ஓ.என்.ஜி.சி. மிகவும் ரகசியமாகத் தொடங்கியது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு பரிந்துரையின்படி முதல் ஷேல் கேஸ் ஆய்வுக் கிணற்றை நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடியில் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டு, விவசாயிகளை ஏமாற்றுவதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் கண்துடைப்பு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
மீத்தேன் திட்டத்தை விடவும் ஆயிரம் மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தால் பல்லாயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால், தமிழகத்தின் உணவு உற்பத்தியில் முதன்மை இடம் பெற்றிருக்கும் காவிரி டெல்டாவில் வேளாண்மை முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்.
பாறை எரிவாயு எடுப்பதற்கு நீரழுத்தப் பிளவு (Hydralic Process) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன்படி பூமிக்கு அடியில் சுமார் 10,000 முதல் 20,000 அடி ஆழம் வரை துளையிட்டு, அதன் பக்கவாட்டில் ஒரு கிலோ மீட்டர் வரை துளையிட்டு, அதில் 600க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை மணலுடன் நீரையும் சேர்த்து அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறை எரிவாயு வெளிக்கொண்டு வரப்படுகிறது.
உள்ளே செலுத்தப்படுகின்ற வேதிக் கரைசல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, மேல்மட்ட நீரில் கழிவுகளாக கலந்துவிடப்படுகிறது. இவ்வாறு கலந்துவிடப்படும் நீர் வேளாண் விளை நிலங்களிலும், ஆறுகளிலும்தான் கலக்கும்.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, நீருடன் காற்றும் மாசு அடையும். காவிரி படுகை பாழாகிப் போவதுடன், மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகும் பேராபத்தும் விளையும்.
பாறை எரிவாயு திட்டத்தால் தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, 19 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வளைகுடா நாடுகளில் பாலைவனப் பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்திட்டத்துக்கு தடை விதித்துள்ளன.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடுதான் விவசாயத் தொழில் முற்றாக இழந்துபோகக்கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் சீரழிவுப் பொருளாதாரக் கொள்கையும், மாநில அரசின் அலட்சியப் போக்கும்தான் காரணம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எனும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மைத் தொழிலை அழிக்கும் மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாறை எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும், மத்திய அரசுக்கு தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல விவசாயிகளும், பொதுமக்களும் பெருங்கோபத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்’’என குறிப்பிடப்பட்டுள்ளது.