NLC-eps
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றும் விவகாரம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால்,1957 ஆம் ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தொடங்கி வைத்த என்.எல்.சி. நிறுவனம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்து, ‘நவரத்னா’ தகுதியைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் பொதுத்துறை நிறுவனமாக ஒளிர்கிறது.
இந்திய அரசு, நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அனல்மின் நிலையத்தை ஏற்படுத்தி, மின்சார உற்பத்திக்கு திட்டம் வகுத்தபோது, நெய்வேலி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்த மக்கள் தங்கள் விளைநிலங்களையும், காலம் காலமாக வாழ்ந்த இடங்களிலிருந்தும் வெளியேறி, பல கிராமங்களை அரசாங்கத்துக்கு மனமுவந்து தாரை வார்த்துக்கொடுத்தனர். எனவேதான், இந்திய அரசு தொடங்கிய பொதுத்துறை நிறுவனத்துக்கு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC Ltd)’ என்று பெயர் சூட்டியது.
60 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், அனல் மின் உற்பத்தி மட்டுமின்றி, சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய மரபு சாரா எரிசக்தித்துறையிலும் சாதனை படைத்து வருகிறது. நெய்வேலி மட்டுமின்றி, இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் சுரங்கம் அமைத்து நிலக்கரி அகழ்ந்து எடுக்கும் பணியிலும், அனல்மின் உற்பத்தித் துறையிலும் சிறந்து விளங்குகிறது.
ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் இந்நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, அமைச்சரவை ஒப்புதலையும் பெற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்ததோடு, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் என்.எல்.சி. தனியார் மயத்துக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தேன். தொழிலாளர்கள் போராட்டங்களுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வாஜ்பாய் அவர்கள் என்.எல்.சி. தனியார் மயமாகாது என்று என்னிடம் உறுதி அளித்தார்.
மன்மோகன் சிங் ஆட்சியிலும் என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை சிறிது சிறிதாக தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியாக, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் அயல் பணி ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 20 சதவீதம் விற்பனை செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்தான், 29.09.2015 அன்று நடைபெற்ற என்.எல்.சி. இயக்குநர்கள் கூட்டத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை, ‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மாற்றிட எடுக்கப்பட்ட முடிவை மத்திய நிலக்கரித்துறை ஏற்றுக்கொண்டு, செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் மின்சாரம் வழங்கும் என்.எல்.சி. நிறுவனம் ‘நெய்வேலி’ என்ற பெயரை தாங்கி இருப்பதை மாற்ற வேண்டிய தேவை என்ன? மத்திய அரசின் இத்திட்டத்துக்குப் பின்னணி என்ன? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் வெட்டுதல், மின் உற்பத்திப் பணிகளை மேற்கொள்வதால், அதன் பெயரை ‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது கண்டனத்துக்குரியது ஆகும்.
‘நெய்வேலி’ என்ற பெயரை நீக்குவதன் மூலம் மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என்.எல்.சி. நிறுவனம் அனுப்பி உள்ள பெயரை மாற்றுவதற்கான வாக்குச் சீட்டில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தின் பெயரை மாற்றும் முயற்சியை கைவிடுவதுடன், என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.’’என்று கூறியிருக்கிறார்.