என். சொக்கன்
zz
பழம் என்பது பொதுப்பெயர், வாழைப்பழம், பலாப்பழம் என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள்.
அதுபோல, தொகுதி என்பது பொதுப்பெயர், பாராளுமன்றத்தொகுதி, சட்டமன்றத்தொகுதி என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள்.
‘தொகுதி’யின் வேர்ச்சொல், ‘தொகு’ என்பது. தொகுக்கப்பட்டது தொகுதியாகிறது.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுகிறார்:
‘…வினையின்தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள், உத்தரகோசமங்கைக்கரசே’
அதாவது, நான் இதுவரை செய்திருக்கிற வினைகளின் தொகுப்பை அழித்து என்னை ஆண்டுகொள் என்று சிவபெருமானைக் கேட்கிறார். வினைகளின் தொகுப்பு, வினைத்தொகுதி!
அதுபோல, ஊர்கள் தொகுக்கப்பட்டு, தொகுதியாகின்றன, அங்கே நடக்கும் தேர்தலில் வெல்பவர் சட்டமன்றத்தின் உறுப்பினராவதால், அதனைச் ‘சட்டமன்றத்தொகுதி’ என்கிறோம். அதாவது, சட்டமன்றப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஊர்த்தொகுப்பு.
தொகுதி என்பது, ஒரு நிலையில் நின்றுவிடுவதில்லை, தொகுதிகள் மீண்டும் தொகுக்கப்படலாம், அதுவும் தொகுதிதான், சற்றே பெரிய தொகுதி.
உதாரணமாக, சட்டமன்றத்தொகுதிகள் தொகுக்கப்பட்டு, இன்னும் பெரிய தொகுப்புகள் உருவாகின்றன, இவற்றைப் ‘பாராளுமன்றத்தொகுதி’ என்கிறோம்.
சில நேரங்களில் ஒரே விஷயம் வெவ்வேறு தொகுதிகளில்கூட இடம்பெறலாம். உதாரணமாக, தவளை ‘நீர்வாழ்வனவற்றின் தொகுதி’யிலும், ‘நிலம்வாழ்வனவற்றின் தொகுதி’யிலும் இடம்பெறக்கூடும்.
‘தொகுதி’ என்ற சொல்லை இன்னும் பலவிதங்களில் பார்க்கிறோம். உதாரணமாக, பாரதியார் கவிதைகளை நூலாக வெளியிடுகிற ஒரு பதிப்பகம், அதனைத் தொகுதி 1: தேசியப்பாடல்கள், தொகுதி 2: பக்திப்பாடல்கள் என்பதுபோல் பல தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடலாம்.
இப்படித் தொகுக்கப்படுகிற எவற்றுக்கும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம், உதாரணமாக, ஆட்டுத்தொகுதி என்றால், கூட்டமாக நிற்பதைக் குறிப்பிடும் சொல்!
இதோ, இந்தக் கட்டுரைகூட, சொற்தொகுதிதான்!
(தொடரும்)