தற்கொலை முயற்சி – உருவபொம்மை எரிப்பு – நேருக்கு நேர் மோதல் : திமுகவில் ரகளை

Must read

47 (1)
தமிழகம் முழுவதும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை நேற்று முன் தினம் வெளியிட்டது. அதில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் பாபுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை, சாலை மறியல், கட்சி அலுவலகம் முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை, வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திரண்ட பாபுவின் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர், திமுக வேட்பாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கு காரில் வந்து இறங்கிய திமுக வேட்பாளரான ஏ.பி.நந்தகுமார், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட அவைத் தலைவருமான முகமது சகி உள்ளிட்டோரை கட்சியினர் சரமாரியாகத் தாக்கினர். இதில், முகமது சகியின் சட்டை கிழிந்தது. இதையடுத்து அவருடன் வந்தவர்கள் வேட்பாளரை மீட்டு அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது, அலுவலக வளாகத்துக்குள் புகுந்த திமுகவினர், அங்கு ஒட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் நந்தகுமாரின் படங்களை கிழித்தெறிந்து, கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து அங்கு வந்த வேலூர் தொகுதி வேட்பாளர் ப.கார்த்திகேயன், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால், வேட்பாளரை மாற்றினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி அதிருப்தியாளர்கள் தொடர் கோஷங்களை எழுப்பினர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக முற்றுகை நீடித்தது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார், திமுக அலுவலகத்துக்குள் சென்று, வேட்பாளர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், முன்னாள் எம்.பி. முகமது சகி உள்ளிட்டோரை வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது, திரண்டிருந்த அணைக்கட்டு தொகுதி திமுகவினர், போலீஸ் பாதுகாப்பையும் மீறி மூவரையும் சரமாரியாகத் தாக்கியதோடு, தண்ணீர் பாக்கெட்களை வீசியெறிந்தனர். அவர்களிடமிருந்து வேட்பாளரைக் காத்த போலீஸார், மூவரையும் காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பிவைத்த
னர். இதையடுத்து அங்கிருந்த அதிருப்தியாளர்கள் கலைந்து சென்றனர்.
சீர்காழி தொகுதியில் திமுக நேரடியாக களம் காண வேண்டும் என்று அந்தக் கட்சியினர், தலைமையை வலியுறுத்தி வந்தனர். தேர்தலில் போட்டியிட சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.
பன்னீர்செல்வத்துக்கே வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சீர்காழி (தனி) தொகுதிக்கான வேட்பாளராக கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கிள்ளை எஸ். ரவீந்திரன் அறிவிக்கப்பட்டார். இது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொகுதிக்கு சிறிதும் அறிமுகம் இல்லாத வேட்பாளர் கிள்ளை ரவீந்திரனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுகவினர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தினிடையே, திமுக கிளை நிர்வாகிகள் திருவாலி ரவிச்சந்திரன், மதி, திருவெண்காடு கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களைத் தடுத்தனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான வீ.மெய்யநாதன் அறிவிக்கப்படுவார் என ஆலங்குடி தொகுதி திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வேட்பாளர் பட்டியலில், ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் (34) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த அந்தக் கட்சியினர் புதன்கிழமை இரவு மறமடக்கியில் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில்லிருந்து நூற்றுக்கணக்கான திமுகவினர், வேட்பாளரை மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, திமுக அலுவலகத்துக்கு பூட்டுபோட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீஸார் இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் அறிவிக்கப்பட்டவுடனேயே கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் பாளையங்கோட்டையில் மைதீன்கான் உருவபொம்மையை எதிர்த்து அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் வேட்பாளரை மாற்றக் கோரி தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article