சாங்
பெய்ஜிங்:
பெய்ஜிங்: டவுன் பஸ், ரயில் பெட்டியில் தனி ஆளாக பயணம் செய்வதே பயமாக இருக்கும். ஆனால் சீனாவில் ஒரு பெண் பயணி தனி ஆளாக போயிங் விமானத்தில் 2 மணி நேரம் பறந்துள்ளார்.
பனிப் புயல் காரணமாக சீனாவில் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். விமான போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பயணிகள் பலர் தங்களது பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர். சிலர் ரிசர்வ் செய்திருந்த விமானத்தை ரத்து செய்துவிட்டு வேறு விமானத்தில் முன் கூட்டியே பயணம் செய்தனர். பலர் பயணத்தையே ரத்து செய்திருந்தனர்.
இந்த வகையில், மோட்டார் கம்பெனியில் பணிபுரியும் சாங் என்ற பெண் சீனாவின் மத்திய உஹானில் இருந்து தென் சீனாவில் உள்ள குவாங்சுவோவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தெற்கு சீன விமான நிறுவனத்தில் வணிக விமானமான போயிங் 737ல் ரிசர்வ் செய்திருந்தார். பனிப் புயலால் இந்த விமானமும் 10 மணி நேரம் தாமதமாக கடந்த திங்கள் கிழமை அன்று இயக்கப்பட்டது.
இந்த விமானத்தில் பயணம் செய்ய சாங் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஒருவர் மட்டுமே விமானத்தில் அமர்ந்திருந்தார். மற்ற பயணிகள் அனைவரும் தங்களது பயண திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர். பின்னர் என்ன, 2 மணி நேரம் ஜாலியாக தனி ஒரு ஆளாக அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். 1,200 யுவான் மட்டுமே கட்டணமாக செலுத்திய சாங்குக்காக இந்த விமானம் இயக்கப்பட்டது.
‘‘விமான சிப்பந்திகள் என்னை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொண்டனர். பைலட்டும் என்னோடு வந்து பேசினார். இது போன்ற அனுபவம் எனது வாழ்க்கை கிடைத்திருப்பது அரிது’’ என்றார் சாங்.