கவுரவ கொலைகள்.. 80 அல்ல… 81…

Must read

 
b
மனித உரிமை செயற்பாட்டாளர்  எவிடன்ஸ் கதிர்: 
 
“தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து,கதிர் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன என்று கேட்டார்.சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும் 80 நடந்து இருக்கிறது தோழர் என்றேன்.
தோழரிடம் பேசிவிட்டு எதோ ஒரு புத்தகத்தை படிக்கச் தொடங்கினேன். மறுபடியும் தொலைபேசி அழைப்பு.உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞரை வெட்டி விட்டார்கள்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.பிழைப்பது கடினம் என்றார்கள்.கவுசல்யா என்கிற தேவர் சமுகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த வன்மத்தை செய்து இருகின்றனர் என்கிற தகவல்.உடனே அண்ணன் ஆறுமுகத்தை அழைத்து கொண்டு உடுமலை பேட்டை சென்றேன்.போகிறபோது சங்கர் இறந்துவிட்டார் என்கிற தகவல் வந்தது.சங்கரின் சொந்த கிராமமான கொமரமங்கலம் சென்றோம்.போலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.அந்த கிராமத்து மக்கள் கைகளை பிடித்து கொண்டு..எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தழுதழுத்தனர்.
சங்கரும் கவுசல்யாவும் பொறியியல் படிப்பு படித்து வருகிறபோது இரண்டு பேரும் காதலித்து வந்து இருக்கின்றனர்.கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கீழ் சாதி பயனை எப்படி காதலிக்கலாம்? என்று கேட்டு கவுசல்யாவை அடித்து சித்ரவதை செய்ய தொடங்கினர்.வேறு வழி இல்லாமல் நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தங்கள் வீடு பெண்ணை சங்கர் கடத்தி சென்றுவிட்டார் என்று காவல் நிலையத்தில் கவுசல்யாவின் தந்தை புகார் கொடுத்து இருந்தார்.இது குறித்து போலிஸ் விசாரிக்கையில் என்னை யாரும் கடத்தவில்லை.நான் சங்கரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன் என்று கவுசல்யா கூற போலிஸ் அந்த வழக்கினை முடித்து வைத்து உள்ளது.
இந்த நிலையில் கவுசல்யாவின் தாத்தா மூன்று மாதத்திற்கு முன்பு கவுசல்யாவை தந்திரமாக் கடத்தி சென்று உசிலம்பட்டியில் அடைத்து வைத்து இருந்து இருக்கிறார்.இது குறித்து சங்கர் புகார் கொடுக்க 4 நாட்கள் பிறகு கவுசல்யா மீட்கபட்டு சங்கரிடம் ஒப்ப்டைகபட்டு இருக்கிறார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுசல்யாவை வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர்,இதுதான் இறுதி எச்சரிக்கை நீ எங்களுடன் வரவில்லை வரவில்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டாய் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் துணி எடுக்க கொமரலிங்கம் பகுதியிலிருந்து உடுமலை பேட்டைக்கு சங்கரும் கவுசல்யாவும் 13 மார்ச் 2016 இன்று மதியம் 2.00 மணிக்கு சென்று இருகின்றனர்.அங்கு 5 பேர் கொண்ட கும்பலால சங்கர் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.கவுசல்யாவிற்கும் கடுமையான வெட்டு காயங்கள்.சிகிச்சை எடுத்து வருகிறார்.

எவிடன்ஸ் கதிர்
எவிடன்ஸ் கதிர்

சங்கரை கொன்றால் கவுசல்யா தங்களுடன் வந்து தானே ஆக வேண்டும் என்கிற சாதிய வன்மத்துடன் இந்த கொலையை கவுசல்யா குடும்பத்தினர் செய்து உள்ளனர்.
உங்களுக்கு 10 லட்சம் கொடுத்து விடுகிறேன்.என் மகளை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று கவுசல்யா குடும்பத்தினர் சங்கரின் குடம்பதினரிடம் சொன்ன போது,சங்கரின் குடம்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர்.அப்போது கவுசல்யா 10 கோடி கொடுத்தாலும் என் கணவனை விட்டு வர மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.அதை நெகிழ்வுடன் அப்பகுதி பெண்கள் சொன்னபோது கலங்கி போனேன்.
குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 1 வருடம் பிணை கொடுக்க கூடாது.சங்கரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை 10 லட்சம் நிவாரணம் போன்ற கோரிக்கையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.இல்லை என்றால் சங்கரின் சடலத்தை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறினேன்.இது அரசின் கடமை.அது மட்டும் அல்ல.இந்த படுகொலை நடந்ததற்கு போலிஸ் துறையின் அலட்சியமும் நடவடிக்கை எடுக்காத போக்கும்தான் காரணம்.எவிடென்ஸ் குழுவினர் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.
இப்பதான் மதுரை வந்தேன்.எனது கார் என்னை இறக்கிவிட்டுவிட்டு திரும்புகிறது.இரவு 1.35 மணி.வீட்டு மாடியில் படர்ந்து இருக்கும் மணி பிளான்ட் இலைகளை கடந்து ஒரு நட்சத்திரம் மின்னுகிறது.அது சங்கரா..ரோகித் வெமுலாவா என்று கேட்டு கொண்டே நுழைகிறேன். கவுரவ கொலையின் எண்ணிக்கை 81 என்று தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் சங்கருகான நீதியை எப்படி தொடங்குவது என்றும் முனைப்புடன் உட்கார்ந்து இருக்கிறேன்.
(முகநூல் பதிவு)

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article