லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்

“எ. இ.ப” என்கிற வார்த்தைகள் தமிழகத்தில் ரொம்பவே பிரபலம். தனியார் தொலைக்காட்சியில் “சொல்லுவதெல்லாம் உண்மை”  என்ற நிகழ்ச்சியில்  லட்சுமி ராமகிஷ்ணன் அவ்வப்போது இந்த வார்த்தைகளை பயன்படுத்தப்போக, அது டிரண்ட் ஆகவே மாறிவிட்டது.
சமூகவலைதளங்களில் கிண்டலாக பயன்படுத்தப்பட்ட  இந்த வார்த்தைகள், சினிமா பாடலாகவும் உருவானது.  இப்போது தி.மு.கவின் “கவர்ச்சிகரமான” தேர்தல் விளம்பரத்துக்கும் இந்த வார்த்தைகள் பயன்பட்டிருக்கின்றன. பதிலுக்கு அதே பாணியில் தி.மு.கவை கிண்டலடிக்கும் வாசகங்களும் இணையதளத்தில் உலவுகின்றன.
சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

இப்படி ஆளாளுக்கு பயன்படுத்தும் அந்த வார்த்தைகள் உருவானது, “சொல்லுவதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில்தான்.  அந்த நிகழ்ச்சியின் இயக்குநராகஇருந்த சரவணன் சந்திரன், அந்த வார்த்தைகள் குறித்து தனது முகநூலில் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“நண்பர்கள் பலரும் கடந்த இரண்டு நாட்களாக ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பது குறித்து நேரிலும் தொலைபேசியிலும் பேசுகிறார்கள். அவர்களிடம் நான் சொன்னதை அப்படியே இங்கு பதிகிறேன்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை உருவாக்கி மூன்று வெவ்வேறு ‘ஆங்கர்களுடன்’ அதை நடத்தியவன் என்கிற முறையில் சொல்கிறேன்,
இந்தச் சொல்லிற்கு நான் உரிமை கொண்டாடவில்லை. என்னைப் பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை கலாய்த்துப் பண்ணப்பட்ட நிகழ்ச்சியில் அந்தச் சொல்லை ‘ஏற்ற இறக்கங்களுடன்’ உச்சரித்தஅந்த மனிதருக்குத்தான் எல்லா பெருமைகளும் சென்று சேரும்.
அந்தச் சொல் ஒரு அற்புதக் கணத்தில் மந்திரச் சொல்லாக வந்து விழுந்ததாக ஒருத்தர் சொல்லியிருக்கிறார். அப்படி அந்த மந்திரச் சொல் வந்து விழுந்த கணத்தில் அவருக்குப் பின்னால் ஒரு ஓங்காரச் சத்தமும் ஒளிவட்டமும் வந்து போனதை அருகில் இருந்து பார்த்த இயக்குனர் என்கிற முறையில் அந்தச் சொல் வந்துவிழுந்த தெய்வீகக் கணத்தை உறுதிப்படுத்துகிறேன். தவிர அந்தச் சொல்லில் இருந்து எழுத்தாளன் என்கிற முறையில் விலகியிருக்கவே விரும்புகிறேன்!”
– இவ்வாறு தனது பதிவில் சரவணன் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.