1 (1)

“ரவுண்ட்ஸ் பாய்…   தி.நகர்ல இருக்கிற சட்டப்பஞ்சாயத்து ஆபீசுல கொடுத்துட்டு வா!”  அப்படின்னு ஒரு பேப்பரை கொடுத்தாரு எடிட்டர்.

“அங்கே யாரு கிட்ட கொடுக்கிறது?”ன்னு கேட்டேன்.

“நீ.. போ.. அங்க இதை வாங்க வேண்டியவரே வாங்கிக்குவார்!”னு  அவரு சொல்ல..

“அதெப்படி என்னை அவருக்குத் தெரியும்?”னு கேட்டேன்.

“உன் முகரக்கட்டைய பாத்தாலே தெரியும்.. போ!”னு விரட்டினாரு.

அங்க போனா.. அட…  அதே மாதிரித்தான் நடந்துச்சு!  ஆபீஸுக்குள்ள தலையை நுழைச்ச அடுத்த நிமிசம், “வா ரவுண்ட்ஸு  சார் பேப்பர் கொடுத்து அனுப்பினாரா”னு கேட்டுகிட்டே வந்தாரு  பொதுச் செயலாளரு செந்தில் ஆறுமுகம்.

அவரை பாத்தவுடனேயே நான் தெரிஞ்சிகிட்டேன்… டிவி விவாதத்துல எல்லாம் வர்றாரே..  ஆனா அவருக்கு எப்படி என்னை தெரிஞ்சுச்சு?

வாய் வரைக்கும் வந்த கேள்வியை அப்படியே முழுங்கிட்டேன். இவரும் எடிட்டர் மாதிரி “உன் முகரகட்டைய பாத்தா தெரியாதா”னு கேட்டா என்னத்த பண்றது?

சரி.. கிளம்புவோம்னு திரும்பறப்பதான்  கவனிச்சேன்…

மதுவிலக்க அறிவிக்கணும்னு  முப்பதாவது நாளா தொடர் உண்ணாவிரதம் நடக்குது அங்கே! இன்னிக்கு மூணு பேர்  உண்ணாவிரதம்.

எத்தனையோ செய்திகளுக்கு மத்தியில இந்த தொடர் உண்ணாவிரதம் பெரிய அளவுல முக்கியத்துவம் இல்லாம போனாலும், அமைதியா, உறுதியா உண்ணாவிரதம் தொடர்ந்துகிட்டு இருக்கு.  ஆச்சரியமாவும் சந்தோசமாவும் இருந்துச்சு!

இன்னிக்கு கலந்துகிட்டவங்க மூணு இளைஞருங்க.  ஈரோட்டுலேருந்து கண்ணையன், சேலத்திலேருந்து சக்திவேல் அப்படின்னு முப்பது வயசு இளைஞருங்க ரெண்டு பேரு. அவங்களோட இன்னொரு இளைஞர் மதுரையிலேருந்து வந்திருக்கிற 63 வயசு பன்னீர்செல்வம்! ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி!

இந்த மூணு பேருமே உண்ணாவிரதம் இருக்கிறதுக்காகவே ஊர்லேருந்து சென்னைக்கு வந்திருக்காங்க!

செந்தில் ஆறுமுகம், “தினமும் உண்ணாவிரதத்துல கலந்துக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து தொடர்புகொள்றாங்க. நாளைக்கு, மதுவிலக்கை அறிவிக்கணும்னு மனு கொடுக்க கோட்டைக்கு போறோம். ஆனாலும் இங்கே வேற மூணு பேர் உண்ணாவிரதம் தொடரும்!”னு சொன்னாரு.

பேசிகிட்ட தன்னோட மொபைலை எடுத்தாரு. எதார்த்தமா பார்த்தேன். “டி.என். போலீஸ்”னு வாட்ஸ் அப் குரூப்ல மெஸேஜ் அனுப்பினாரு.

“என்ன சார்.. போலீஸ்காரங்கதான் உங்களை அரெஸ்ட் பண்றதுலயே குறியா இருக்காங்க.. அவங்ககூட வாட்ஸ் அப் சகவாசம் வேறயா?”னு கேட்டேன்.

அதுக்கு செந்தில் ஆறுமுகம் சிரிச்சிகிட்டே, “என்னப்பா பண்றது… நாங்க போராட்டம் அறிவிச்சா உடனேயே கமிஷனர் ஆபீ்ஸ்லேருந்து  சிட்டி இன்டலிஜென்ஸ் அப்படின்னு சொல்லி, எப்போ போராட்டம் எப்படிப்பட்ட போராட்டம் எத்தனை பேர் வர்றாங்கன்னு ரெண்டு மூணு பேர் போன்பண்ணி கேக்குறாங்க.. அப்புறம் அதே கேள்விகள சி.பி.சி.ஐ.டி., க்யூ பிராஞ்ச்னு ஆளாளுக்கு கேக்குறாங்க..  ஒரே  மாதிரி கேள்விய பத்து பேரு கேக்க..  அவங்களுக்கு பதில் சொல்லி மாளலை

அதான் அவங்க நம்பரை எல்லாம் சேர்த்து “டி.என். போலீஸ்”னு ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சு முக்கிய போலீஸ் அதிகாரிங்க நம்பர்களை சேர்த்திட்டேன்.

போராட்டம் பற்றி எப்படி மத்தவங்களுக்கு தகவல் சொல்றோமோ அதே மாதிரி இந்த வாட்ஸ் அப் போலீஸ் குரூப்லேயும் போட்டுவேன்.

நமக்கும் நிம்மதி.. அவங்களும் இப்போ ஹேப்பி!”ன்னார் சிரிச்சிகிட்டே!

“ஆட்டையில இது புதுசால்ல இருக்கு”னு நெனச்சிகிட்டே நடையை கட்டினேன்.