உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதம்

Must read

1419396099-1315
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக ஆரம்பத்தில் “சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்’ என்ற முறையில் இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது வாதத்தை முன்வைத்தார்.
இதேபோல, வழக்கு தொடுத்திருந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தனது வாதத்தை வியாழக்கிழமை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, அன்பழகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா ஆஜராகி தனது இறுதி வாதத்தை முன்வைக்க முற்பட்டார். அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நாகேஸ்வரராவ், “அந்தி அர்ஜுனா வாதத்தை முன்வைக்க அனுமதிக்கக் கூடாது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை கர்நாடக அரசு மட்டுமே தொடுத்துள்ளது. அந்த உரிமையை அன்பழகன் தரப்புக்கு வழங்கக் கூடாது. இதை அரசியலுக்காக அன்பழகன் தரப்பு பயன்படுத்த முயலுகிறது’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் “மேல்முறையீடு வழக்கில் கர்நாடக அரசு ஏற்கெனவே போதுமான வாதங்களை முன்வைத்துள்ளது. வழக்கு விசாரணையின்போதும் அன்பழகன் தரப்பு முன்வைத்த வாதம், கர்நாடக அரசின் வாதங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது. எனவே, எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் இறுதி வாதத்தை முன்வைக்க அன்பழகன் தரப்பு கோருகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர். இதற்கு வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிரான வாதங்களையும் வழக்கின் முக்கிய அம்சங்களையும் விசாரணை நீதிமன்றத்திலும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் முன்வைத்தவர் அன்பழகன்’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் “மனுதாரர் என்ற முறையில் விசாரணை நீதிமன்றத்திலேயே உங்களுக்கான முறையீட்டு உரிமை முடிந்து விட்டது. அதன் பிறகு கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணையின்போதும் உங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், அதன் பிறகும் உச்ச நீதிமன்றத்திலும் உங்கள் வாதங்களை முன்வைக்க முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை.
அன்பழகன் தரப்பிலும், கர்நாடக அரசு தரப்பிலும் ஏற்கெனவே எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க விரும்புகிறோம். எனவே, தீர்ப்பை அறிவிக்கும்போது இந்த விவகாரத்தில் அன்பழகன் தரப்புக்கு வாதிட முகாந்திரம் உள்ளதா என்பதை பதிவு செய்கிறோம்’ என்று குறிப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைக்கிறார்.

More articles

Latest article