newsbond
நியூஸ்பாண்ட்:
“நானும் செய்தி பாணியிலேயே ஒரு மேட்டர் அனுப்பியிருக்கிறேன்” என்று வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பியிருந்தார் நியூஸ்பாண்ட்.
இதோ அந்த செய்தி…
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் இன்று துவக்கப்பட்ட, “அம்மா” உணவகங்கள் திறப்பு விழாவிற்கு, மாநகராட்சி மேயர் துரைசாமி அழைக்கப்படவில்லை.
தனது கனவுத்திட்டமான “அம்மா” உணவகத்தை முதலில் சென்னையில் துவக்கிய முதல்வர் ஜெயலலிதா, பிறகு மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தினார். இவை அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன.
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள், பிறகு  அரசு மருத்துவமனைகளிலும் துவங்கப்பட்டது.  தற்போது மொத்தம் 300 அம்மா உணவகங்கள் சென்னையில் செயல்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் மேலும் 107
அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி திறந்தது.
இதற்கான விழா 35-வது வார்டு பகுதியான  எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் இன்று காலை நடந்தது.  அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இந்த புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

சைதை துரைசாமி
சைதை துரைசாமி

ஆனால் இந்த விழாவில் மாநகராட்சி மேயரான சைதை துரைசாமி கலந்துகொள்ளவில்லை.
“சமீபத்தில் அவரது (மகன்) வீட்டல் வருமானவரி ரெய்டு நடந்தது. ஏற்கெனவே மாநகராட்சி பூங்கா ஒன்று அகற்றப்பட்ட விவகாரத்திலும் சைதை துரைசாமி மகனது பெயர் அடிபட்டது. இதுபோன்ற தொடர் புகார்களின் பின்னணியில் சைதை துரைசாமியும் இருப்பதாக முதல்வர் நினைக்கிறார். ஆகவே அவர் மீது முதல்வர் கோபமாக இருக்கிறார். இதையடுத்து அவரை எந்த விழாவுக்கும் அழைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்” என்று கூறப்படுகிறது.
இன்னொரு விசயம்…
இன்று 107 உணவகங்கள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றில் நாற்பதுக்கும்  மேற்பட்ட உணவகங்கள் இன்னும் செயல்பட தயாராகவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.