ganesha_main_wide_1
உலகின் எந்த பகுதிக்கு இந்து மக்கள் குடியேறினாலும், தங்களது வழிபாட்டையும் பாரம்பரியத்தையும் கைவிடமாட்டார்கள். செல்லுவிடமெல்லாம் தங்கள் தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பும் அரும்பணியை அர்பப்ணிப்புடன் செய்து முடிப்பார்கள்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எழுந்து நிற்கும் இந்துக்கோயில்கள் இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும். சமீபத்தில் துபாயிலும் கோயில் பணி துவங்கியுள்ளது.
இந்த வரிசையில் அமெரிக்காவும் உண்டு. இங்கு பல கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது அரிசோனா பகுதியில் எழும்பி நிற்கும் அருள்மிகு மகாகணபதி ஆலயம்!
ஆகம விதிகளை அப்படியே பின்பற்றி, அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு. அதோடு, பூஜைகள், விழாக்கள் அனைத்தும் நமது பாரம்பரிய நெறிப்படு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த கணபதி ஆலயம் குறித்து இங்கே ஒரு கண்ணோட்டம்…
சிகரத்தில் அதிசயம்:
அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது மகாகணபதி ஆலயம். மலைப்பகுதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இந்த விநாயகப்பெருமானை, மாலை 3:45 மணி முதல் 5 மணி வரை சூரியனின் மறையும் சமயத்தில் காண கண்கோடி வேண்டும்! மாலை நேரத்து சூரியக்கதிர்கள், மலை முகடுகளின் இடையே ஒளிவீச.. விநாயகரின் அற்புதத் தோற்றம் நம்மை மெய்மறக்கச் செய்யும்!
ஸ்தல புராணம்:
அமெரிக்காவின் ஹவாய் தீவை நாம் அனைவரும் அறிவோம். அத் தீவு போலவே, இயற்கை எழில் மிகுந்த கவாய் தீவும் அருகிலேயே இருக்கிறது. அங்கு புகழ்பெற்ற சிபக்தரும் மடாதிபதியுமான சிவாய சுப்ரமணியர் கனவில், “ஹரிசோனாவுக்கு பிள்ளையார் சிலை வருகிறது. அதற்கு ஆலயம் அமையுங்கள்” என்று அருள் வாக்கு சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சைவ ஆதீன ஸ்தாபகர், சமாதி அடைந்த குருதேவர் சுப்பிரமுனிய சுவாமி, மாமல்லபுரத்தில் வடிவமைத்து வழங்கிய, நான்கு அடி உயர விநாயகர் சிலையை, ஒரு வீட்டில் வைத்து இந்து மக்கள் வழிபட்டனர்.
அதன் பிறகு, 2,100 சதுர அடி ஒரு கட்டடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடந்ததுத்தப்பட்டது. அர்ச்சகரும் நியமிக்கப்பட்டார். . விநாயகருக்கு கோவில் கட்ட “மகிமா” என்னும் கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்பட்டது.
ஆலயத்துக்கான அஸ்திவாரம்:
பக்தகோடிகள் பேராதரவு தர… தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோவில் ஸ்தபதிகளில் ஒருவரான முத்தையா ஸ்தபதியின் வடிவைப்பு உதவியுடன் ஆலயம் எழுப்பும் பணி தொடங்கியது. 7,600 சதுர அடி பரப்பளவில்ல் ஒரு கோவில் மண்டபத்துடன் கூடிய ஆலயம் எழுந்தது. தமிழகத்தில் இருந்து வந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரகத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தனர். 2008ம் ஆண்டில் விநாயகர் நடுநாயகமாக எழுந்தருள, கோதாவரி ஆற்றுக் கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், பாலாஜியும், அவருக்கு இரு புறமும், மற்றும் நவ க்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விமானங்களும், ராஜ கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டன.
விழாக்கள்:
ஆலய திறப்பு விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய பஞ்சலோக உற்சவத் திரு உருவங்களின் ஊர்வலமும் நடந்தது.
விநாயக சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு விழா, யுகாதி, மகர சங்கராந்தி/பொங்கல் போன்ற விழாக்களுடன், மகாருத்ரம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. சனி, ஞாயிறு மட்டுமன்றி, மற்ற நாட்களிலும், மாலை நேரத்தில் கோவில் திறக்கப்பட்டது. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்ய, பிரசாதமும் பக்தர்களே தயாரித்து வழங்கி வருகின்றனர். திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கும்பாபிஷேகம்
முருகனுக்கும், ஐயப்பனுக்கும், விசாலாட்சி, பத்மாவதி ஆகியோருக்கும் தனி தனி சன்னதிகள் எழுப்பப்பட்டது. 2014ம் ஆண்டு மே மாதம் மூன்று விமானங்களுக்குக் குடமுழுக்கும், நடராஜர்-சிவகாமி சன்னதி, மற்றும் சத்தியநாராயணர் சன்னதி பிராணப் பிரதிஷ்டை, மற்றும் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறின. ஜூன் 28ல் நடராஜருக்கும், சத்யநாராயணருக்கும் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. அன்று ராஜகோபுரம் கட்டும் பணியின் துவக்கமாக, வடக்கு கோபுரத்திற்கு வைக்கும் செங்கல்களுக்குச் சிறப்புப் பூஜை செய்யப் பட்டது.
தமிழகத்தில் வள்ளியூரை சேர்ந்த ஜெயந்தீஸ்வரன் பட்டர் அரிசோனா விநாயகர் கோவிலுக்கு சேவை செய்து வருகிறார். அதே போல் ஆந்திராவில் இருந்து வந்து இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார் அனில் சர்மா.
இந்த ஆண்டிற்கான விழாக்கள்:
ஜனவரி 16ம் தேதி: மகா சங்கராந்தி பொங்கள் கொண்டாட்டம் மற்றும் ஐயப்பன் இருமுடி பயணம்.
காலை 11 மணி& மகா சங்கராந்தி அபிஷேகம்
பிற்பகல் 12 மணி& சிறப்பு பொங்கல் வழங்கல்
மதியம் 12.30 மணி& ஐயப்பா இருமுடி பயணம்
மதியம் 3 மணி& சிறப்பு ஐயப்பா பஜனை
மாலை 5 மணி& ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்.
மாலை 6 மணி&படி பாட்டு மற்றும் ஐயப்பனுக்கு அர்ச்சனை
மாலை 6.30 மணி மகா ஆரத்தி மற்றும் பிரசாதம்
ஜனவரி 23ம் தேதி: தைப்பூசம் கொண்டாட்டம்&சுப்ரமணிய சுவாமி காவடி திருவிழா
காலை 10.30 மணி: சிறப்பு காவடி மற்றும் பால்குட ஊர்வலம்
பிற்பகல் 12 மணி: வள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
மதியம் 1 மணி: சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை
மதியம் 1.30 மணி: மகா ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல்
பிப்ரவரி 14ம் தேதி: ராஜகோபுரம் பூமி பூஜை
அதிகாலை 3.30 மணி: கணபதி அனுஞய மற்றும் கணபதி பூஜை
காலை 9 மணி: புன்னியஹவசனம்
காலை 9.30 மணி: வாஸ்து பூஜை மற்றும் வாஸ்து ஹோமம்
காலை 10.30 மணி: கஜ/கோ பூஜை, கலச ஊர்வலம், அஸதோஸ்த்தர சகத கலசாபிஷேகம்
காலை 11.20 மணி: ராஜகோபுரம் நிர்மன்ய பூஜை, முதல் செங்கலை யானை வழங்குதல்
பிற்பகல் 12.30: மகா ஆரத்தி
காலை 11.30 மணி முதல் 1 மணி வரை போட்டோ எடுத்தல் மற்றும் யானை ஆசி பெறுதல்
பிப்ரவரி 22ம் தேதி :மாசி மகம்
மாலை 6.30 மணி: நடராஜர் சிறப்பு அபிஷேகம்
இரவு 7 மணி: மகா ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல்
வார நாட்களில் தினமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
இந்த கோயிலைக் கட்டும் அரும்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் மௌலி சுப்ரமணியன். சென்னை வந்திருந்த அவரை சந்தித்தோம். “எல்லாம் இறைவன் செயல்” என்று பேச ஆரம்பித்த அவர், “சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம் பாரத பூமியில் கட்டப்பட்டும் இந்து கோயில் போலவே, ஆகம விதிகளை அட்சரசுத்தமாக பின்பற்றி ஆலயம் எழுப்ப வேண்டும் என்று விருப்பப்பட்டோம். இறைவன் அருளாலும் பக்திமான்கள் உதவியாலும் அது நடந்தேறியது. இங்கு வீற்றிருக்கும் விஸ்வரூப ஹனுமானும் பக்தர்களை மிகவும் கவர்ந்துள்ளது.  ராஜகோபுர பணிகள் தொடர்கின்றன.  அர்ச்சகர் குடியிருப்பு, விருந்தினர் இல்லம், கம்யூனிட்டி ஹால் என்று பல்வேறு பணிகளும் செய்து முடிக்கவேண்டும்.   .. 15 ஏக்கர் பரப்பளவு உள்ள பரந்த இடத்தில் கோயில் பணிகள் தொடர்ந்தபடி உள்ளன. இறைவன் சித்தத்தால் பணிகள் நடந்தேறிவருகின்றன” என்கிறார் தன்னடகத்துடன்.
கோயிலை பற்றி மேலும் விபரங்கள் அறிந்துகொள்ள… http://www.ganapati.org