vishinside

சாவதாரம் படத்தில் கமலஹாசன் சொல்லும் கேயாஸ் தியரி மாதிரிதான் வாழ்க்கையும். கண்களில் பாலிடாயில் ஊற்றிக்கொண்டு பார்த்தாலும்  இந்த நடிகர் சங்க தேர்தலுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்போ, பயனோ இல்லை.தான்.

ஆனால் நயன்தாராவை பார்க்க ஐயாயிரம் பேருக்கு மேல் கூடும் தமிழகத்தில்,  நடிகர்  தேர்தலுக்கும் பொதுமக்களுக்கும் ஏதோதொடர்பு இருக்கக்கூடும்.. அதே கேயாஸ் தியரி மாதிரி கண்ணுக்குத்தெரியாமல்.

அதனால்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட செய்தி தொலைக்காட்சிகள், செய்தி நாளிதழ்கள், செய்தி வார இதழ்கள்,  செய்தி இணைய இதழ்கள் எல்லாமும் இந்தத் தேர்தல் செய்தியை நொடிக்கு நொடி அப்டேட் செய்கின்றன.

சரி,  இத்தனை முக்கியமான தேர்தலில் யார்தான் ஜெயிப்பார் .. சரத்தா நாசரா?

கருத்துக்கணிப்பு, யூகங்கள் என்கிற மாய்மாலத்தைய எல்லாம் விட்டுவிட்டு.. யதார்த்த நிலையை  தெரிந்துகொள்ள ஒரு ரவுண்ட் வந்தோம்.

அந்த முடிவைப் பார்க்கும் முன் ஒரு சின்ன புள்ளி விவரம்.

இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட தகுதியுள்ள மொத்த வாக்காளர்கள் 3,139 பேர்.  இதற்கு முன்பு, வெளியூர்களில் இருந்து 1,175 வாக்காளர்கள் தபாலில் ஓட்டுக்களை அனுப்பினார்கள். அவர்களில்  241 பேர் இந்த முறை நேரில் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார்கள்.

ஆகவே மீதியுள்ள 934 பேருக்கு தபாலில் வாக்களிக்க வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 12-ம் தேதி முதல் தபால் ஓட்டுகள் சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தன. இதுவரையிலும் 61 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

முதலில் நேரில் வருவதாகவும், பின்னர் தபாலில் ஓட்டுப் போடுவதாகவும் மாறி மாறி கடிதம் அனுப்பிய 150 பேரின் ஓட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   தபால் ஓட்டுகள் வந்து சேர்வதற்கு நாளை 17-ம் தேதி) கடைசி நாள்.

அதன் பிறகு நாளை மறுநாள் 18-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. நேரடியாக வாக்களிப்பவர்கள் இங்கே வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள்.

இதுதான் வாக்காளர்ஸ் எண்ணிக்கை தியரி.

சரி, இந்த வாக்காளர்கள் எப்படிப்படவர்கள், யாருக்கு பெரும்பான்மையானவர் ஓட்டளிப்பார்கள்…?

இன்று நாம்  சுற்றி சுற்றி அலைந்ததில் கிடைத்த தகவல்கள்…

வாக்காளர்கலில் ஆகப்பெரும்பாலானவர்கள் நாடக நடிகர்கள் அல்லது சிறு வேடங்களில் திரையில் தலைகாட்டும் பாவப்பட்டவர்கள்.  வறுமையில் உழலுபவர்கள்.

இவர்களில் பலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல் இதுதான்:

விசால் அணியினர் நியாய தர்மங்களுக்காக போராடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயமும் இருக்கலாம். ஆனால்  பெரும்பாலான அந்த ஏழை வாக்காளர்களுக்கு இது பொருட்டாக இருக்கவில்லை.

“நடிகர் சங்க இடம் இத்தனை கோடி போகும், அத்தனை கோடி ஏமாத்திட்டாங்கனு புகழ் பெற்ற நடிகர்கள் பல பேரு பேசறாங்க. அவங்களுக்கு அது ஈகோ யுத்தமா இருக்கலாம்.  ஒருவேளை சோத்துக்கு வழியில்லா அல்லாடற எங்களுக்கு எதுக்குங்க அந்த கோடி ரூபா கணக்கெல்லாம்” என்றார்கள்.

நியாயம் முக்கியமா, பணம் முக்கியமா என்றால்…  இவர்கள் பணத்தின் பக்கமே நிற்பார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.. இது மனித இயல்பு.

இப்படி ஏழ்மை நிலையில் இருக்கும் நடிகர்களில் முக்காலே மூணு வீசம் பேர், ஏற்கெனவே ராதாரவிக்கு அறிமுகமானவர்கள். அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிப்பதாக உறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் என்கிற அளவில் பேசப்பட்டிருக்கிறது.

இதுபற்றி சிலரிடம் கேட்டபோது., “இதுல என்ன தம்பி தப்பு.. வாழ்க்கைய நிர்ணயிக்கிற முதல்வர், பிரதமர் (சட்டமன்ற, பாராளுமன்ற) தேர்தல்லேயே காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறாங்க.. இந்த தேர்தல் எந்த மூலைக்கு” என்று லாஜிக்கா பதில் அளித்தார்கள். என்ன இருந்தாலும் நடிகர்கள் அல்லவா?

“தவிர, கடந்த பல வருடங்களில் சரத், ராதாரவி ஆகியோர் தங்களது வீட்டு வேலையாட்கள், நெருங்கிய உறவினர்கள் பலருக்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கியிருக்கிறார்கள்.  அவர்களில் பெரும்பாலானவர்கள் நடிப்பது இல்லை வெவ்வேறு துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஓட்டு அனைத்தும் சரத் -ராதாரவி அணிக்குத்தான்” என்றும் சொல்கிறார்கள்.

நாம் சந்தித்த நடிகர் ( சங்க அட்டை வைத்திருப்பவர்) ஓட்டல் ஒன்றில் பணியாற்றுகிறார்.

“வாக்கெடுப்பு அன்று வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தாலே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சட்டப்படி  இவர்கள் ஓட்டுரிமை உள்ளவர்கள்  என்பதால் விசால் அணியினரால் எதுவும் செய்ய முடியாது” என்றார் மூத்த துணை நடிகர் ஒருவர்.

இப்படி ஓட்டுரிமை உள்ள… வெளியூரில் வேலை பார்த்தவர்களும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு பாரீஸ் மற்றும் சென்ட்ரல் பகுதி லாட்ஜ்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், “தூத்துக்குடி பக்கத்துல கிராமம்..   அண்ணன் கிட்ட டிரைவரா இருந்தப்ப நடிகர் சங்க அட்டை வாங்கிக்கொடுத்துச்சு… இப்போ கூப்புடுச்சு.. அதான் ஓடியாந்தேன்.. அண்ணனுக்கு ஓட்டுப்போட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்” என்றார்.

விசால் அணியினருக்கு இது போன்ற ஓட்டுக்கள் எதுவும் கிடையாது.  ஓட்டுரிமை உள்ள ஏழை நடிகர்களில்.. அதாவது ஒரிஜினல் நடிககர்களிலேயே..  பெரும்பான்மையோரை அவர்களுக்குத் தெரியாது.

சமீபத்தில் விசால் அணியினர் நாடக நடிகர்களை சந்திக்க வெளிமாவடங்களுக்குச் சென்றபோது, இவர்கள் வரும் நேரம் அங்குள்ள நாடக நடிகர்கள் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

ஆக..  மேலோட்டமாக அலசும்போது விசால் அணி வெற்றி பெறும் என்ற தோற்றம் இருந்தாலும், சரத் அணியினரே வெற்றிபெற வாய்ப்பு அதிகம்.

  • நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்றைய நிலவரம் இதுதான்.