டெல்லி: அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குவது ஏன்? என  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது. கேரள மாநில வழக்கில், மாநில அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

நாடு முழுவதும் ஓய்வு ஊதியம் பெறுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும், அவர்களின் உதவியாளர்கள், டிரைவர்கள் என ஏராளமானோர் அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். அரசியல் நிலைப்பாடு காரணமாக சில நாட்கள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை பெற்று வருகின்றனர். அதுபோல ஏராளமான எம்.பி.க்களும் ஓய்வூதியம் உள்பட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது.

இந்த நிலையில், கேரளாவில் அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவையில்,  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். புதிய அமைச்சர்களுக்கு, அவர்களின் நம்பிக்கைக்கு உரிய புதிய உதவியாளர்கள் நியமிக்கபடுகின்றனர். இதனால், அரசுக்கு மேலும் செலவுகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தில் கேரளமாநில போக்குவரத்துக் கழகம்(கேஎஸ்ஆர்டிசி) சார்பில் டீசல் விலை உயர்வு தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில்,  கடந்த 2006-ம் ஆண்டுகொண்டு வரப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் சட்டத்தின்படி எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோருகிறோம். டீசல் விலை உயர்வால் கேஎஸ்ஆர்டிசி-க்கு நாள்தோறும் கூடுதல் செலவாகிறது. எனவே, டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும். இதனால்மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி நசீர் கூறும்போது, “கேரளாவில்2 ஆண்டுகளுக்கு மட்டும் அமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் மாற்றப்பட்டு புதிதாக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய அந்த உதவியாளர்களுக்கு அரசு சார்பில் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இதனால் அரசுக்குக் கூடுதல் செலவாகிறது. இந்த முறை கேரள மாநிலத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது.

ஏன் இந்த நடைமுறை என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். கேரள மாநிலமானது இவ்வளவு வளம் படைத்ததாகவும், பணக்கார அரசாகவும் இருக்கும்போது, எரிபொருள் விலையுயர்வையும் சமாளிக்க முடியுமே என்று கூறினார்.

மேலும்,  2ஆண்டுகளுக்கு ஒரு முறைஅமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்து அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் தர வசதி இருக்கும்போது எரிபொருள் விலையுயர்வையும் சமாளிக்கலாம். எங்களின் வார்த்தைகளை மாநில அரசுக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்.

இதையடுத்து கேரள அரசின் போக்குவரத்து துறையான  கேஎஸ்ஆர்டிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை மாநில அரசிடம் எடுத்துச் சொல்வேன். உடனடியாக இந்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கனம் நீதிபதி தெரிவித்த கருத்துகளை அடுத்த 5 நிமிடங்களில் செய்தி ஊடகங்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்லும். இது கேரள அரசின் காதுகளுக்கும் எட்டும்” என்றார்.