டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என மத்தியஅரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், மத்தியஅரசு ‘அணை பாதுகாப்பு மசோதா (2019)’ கொண்டு வந்து அதை நிறைவேற்றியது. அதன்படி, அணை உடைவது தொடர்பான பேரிடர்களைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து பெரிய அணைகளின் போதுமான கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால், இந்த மசோதாபடி தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த மேத்யு நெடும்பாறா என்பவர் முல்லை பெரியா அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‘வயநாட்டில் ஏற்பட்டது போன்ற பேரிடர் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஏற்பட்டால் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு சுமார் 60 லட்சம் உயிர்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற பேரிடரை தடுக்க தற்காலிகமாக முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும். இதன் நீண்ட கால தீர்வாக முல்லைப் பெரியாறு அணையின் 50-வது அடியில் சுரங்கம் அமைத்து நீரை எடுத்து வைகை அணையில் விட வேண்டும். இதற்காக வைகை அணையின் நீரை தேக்கி வைக்கும் பரப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த், திபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணனுடன் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பான பின்னணியை எடுத்துரைத்தார். குறிப்பாக அணை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதையும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழு அணையில் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டார். மேலும் முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை ஆராய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் கூட்டம் ஜனவரி 10-ந்தேதி (அதாவது நாளை) கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த பிறகு, எதையும் மத்திய அரசு செய்யவில்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கும் யோசனையை தெரிவித்தனர். மேலும், அணை பாதுகாப்பு சட்டத்தின் படி, சட்டம் நடைமுறைக்கு வந்த 60 நாட்களுக்குள் அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்.
இதுபோன்ற சட்டம் இருந்தும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவை அமைக்காமல் இருப்பது ஆழமான உறக்கத்தில் இருந்து மத்தியஅரசு எழவில்லை என்பதை காட்டுகிறது. இது திகைப்பை அளிப்பதாக உள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அணை பாதுகாப்பு சட்டத்தின் படி, அணை பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை கொண்டு தேசிய குழு அமைக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த குழு மத்திய அரசால் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அதில், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய அளவிலான நிபுணர் குழு ஏன் அமைக்கப்படவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அணை பாதுகாப்பு சட்டத்தில் மேற்பார்வை குழு அமைக்க கூறவில்லை. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே மேற்பார்வை குழுவை அமைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவின் பொறுப்புகள் குறித்து கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.