
லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியினர், அவர்களுடைய சொந்த மருந்தையே ருசி பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் – நைல்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், மேற்கிந்திய அணியின் ஓஷ்னே தாமஸ் வீசிய ஷாட் பால்களால் நிலைகுலைந்த பாகிஸ்தான், வெறும் 105 ரன்களுக்கு, 22 ஓவர்களில் மொத்தமாக காலியானது.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர், தங்களின் இரண்டாவது ஆட்டத்தில் மோதவுள்ளனர்.
இந்நிலையில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர். “மேற்கிந்திய தீவுகள் அணி எப்படி தங்கள் பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தானை மிரட்டியதோ, அதேபோன்று எங்கள் பந்துவீச்சாளர்களும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மென்களை மிரட்டுவர்” என்று கூறியுள்ளார் அவர்.