டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை  உத்தரகாண்ட் அரசு வெளியிட்டது

மக்கள் உணவில் எச்சில் துப்புவதைத் தடுப்பதற்கும், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும், ஹோட்டல் மற்றும் ‘தாபா’ ஊழியர்களை காவல்துறை சரிபார்ப்பது மற்றும் அவர்களின் சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்றவற்றுக்கு உத்தரகாண்ட் அரசு விரிவான வழிகாட்டுதல்களை  வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம்  முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரொட்டிக்கு மாவை தயார் செய்யும் போது சமையல்காரர் அதன் மீது எச்ச்சில் துப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கடும் விமர்சனங்களும் எழுந்த. இதையடுத்து,  உணவில் எச்சில் துப்புதலை நிறுத்த வேண்டும் என்று அறிவித்துள்ள உத்தரகாண்ட் அரசு,  இதுபோன்ற சம்பவங்களில்  ஈடுபடுவோருக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும்,  உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள  உணவகங்களில் சமைக்கும் போது உணவில் எச்சில் துப்பப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உணவகங்களில் சிசிடிவி நிறுவ வேண்டும். உணவில் எச்சில் துப்பினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றும் சில மாதம் முன்பு உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து, தற்போது உத்தரகாண்டிலும் பாஜக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன் சிங் ராவத், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தூய்மையே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்றார். உத்தரகாண்டை பொறுத்தவரை எந்தவிதமான தூய்மையற்ற அல்லது உணவு விஷயத்தில் எந்த விதமான சமூக விரோதச் செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் கடுமையாக எச்சரித்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இதுபோன்ற செயல்களை “தூக் (துப்பி) ஜிஹாத்” என்று கடுமையாக விமர்சித்தவர்,  . குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். “

இதைத்தொடர்ந்து,  மாநில காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் மூலம் இதற்கு என தனித்தனி வழிகாட்டுதல்கள் வெளியிட உத்தரவிட்டார்.

அதன்படியே தற்போது  வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதாரச் செயலாளரும், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆணையருமான ஆர்.ராஜேஷ் குமார், ஒரு விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டார்,

அதன்படி,  உணவுகளில் எச்சில் துப்புவது தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, உத்தரகாண்ட் மாநில சுகாதாரம் மற்றும் உணவுத் துறை, முனிசிபல் கார்ப்பரேஷன்/மாவட்ட பஞ்சாயத்து, முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து பொது விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மீறி இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்  குற்றவாளிகளுக்கு எதிராக ரூ. 25,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான நடவடிக்கையை கட்டாயமாக்குகிறது.

மேலும்,  உணவு பொருளில் மனிதக் கழிவுகளைத் துப்புவதன் மூலமோ அல்லது கலப்பதன் மூலமோ உணவு மாசுபடுவதை அறியக்கூடிய மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாற்ற இரண்டு அவசரச் சட்டங்களைக் கொண்டுவருவதாகக் கூறியது.

இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வாறு, ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களில் உள்ள ஊழியர்களின் விவரங்களை 100 சதவீதம் காவல்துறை சரிபார்க்க வேண்டும்.

உணவகங்களில் சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை கட்டாயப்படுத்த வேண்டும்.

நடமாடும் உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளிட்ட திறந்த வெளி உணவகங்களில் சோதனை செயய உள்ளூர் புலனாய்வுப் பிரிவுகளைப் பயன்படுத்துமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உணவில் கலப்படம் செய்தது உறுதியானால், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 274 மற்றும் உத்தரகாண்ட் காவல் சட்டம் பிரிவு 81 இன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  இந்த சட்டப்பிரிவில் கைதானால் 6 மாதம் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு செயல் மதம், இனம் அல்லது மொழியை எதிர்மறையாக பாதிக்கிறது என்றால், 196(1)(B) (பகைமையை ஊக்குவித்தல்) அல்லது பாரதிய நியாய சன்ஹிதாவின் 299 (மத நம்பிக்கைகளை அவமதிப்பது) போன்ற தொடர்புடைய பிரிவுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.