இந்தியாவில் தயாராகும் சோலார் (சூரிய மின்சாரம்) பொருட்களின் ஏற்றுமதிக்கு 126% வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் அமெரிக்க விசாரணையில் பங்கேற்காமல் விலகியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் முந்த்ரா சோலார் எனர்ஜி மற்றும் முந்த்ரா சோலார் PV ஆகிய நிறுவனங்கள் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய தரப்புகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், அவை தேவையான தகவல்களை வழங்காமல் விசாரணையில் இருந்து விலகியதால், அமெரிக்க வணிகத் துறை “கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எதிர்மறை தீர்ப்பு நடைமுறை” என்ற விதியின் கீழ் கடுமையான தண்டனை விதித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிக வரி நடவடிக்கை பிப்ரவரி 20 அன்று முழு துறைக்கும் (sector-wide) பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்ட விசாரணை அறிக்கையில்,
இந்த இரண்டு நிறுவனங்களும் கேட்ட தகவல்களை வழங்கவில்லை, குறிப்பிட்ட காலக்கெடுவில் பதில் அளிக்கவில்லை, மேலும் ஆரம்ப கேள்வித்தாளுக்கும் முழுமையாக பதில் அளிக்காததால் விசாரணை செயல்முறையை பாதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய காலத்தில் அதிக அளவில் சோலார் செல்களை ஏற்றுமதி செய்ததுடன், இந்திய அரசின் பல திட்டங்களின் சலுகைகளையும் பயன்படுத்தியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவின் சோலார் துறை சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளின் மீது அதிகமாக சார்ந்திருக்கிறது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. சீன நிறுவனங்கள் இந்தியாவிலும் முதலீடு செய்து உற்பத்தி நிலையங்களை அமைத்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, கடந்த ஆண்டு நவம்பரில் அதானி நிறுவனங்கள் விசாரணையில் இருந்து விலகிய பிறகு இந்த வழக்கு மேலும் கடுமையானதாக மாறியதாக கூறினார்.
மேலும், Waaree Energies போன்ற சில இந்திய நிறுவனங்கள் விசாரணையில் பங்கேற்றாலும், தனியாக விசாரணை செய்யப்படாத ஏற்றுமதியாளர்களுக்கும் தற்போது அதே 125.9% வரை ஆரம்ப கட்ட வரி விகிதம் பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணையை அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று தொடங்கியது. அமெரிக்க சோலார் உற்பத்தியாளர்கள் கூட்டணி அளித்த மனுவின் அடிப்படையில் மானியத்தை ஈடு செய்யும் வரி (countervailing duty -CVD) விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை காலத்தை முதலில் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என நிர்ணயித்திருந்தனர். பின்னர் இந்திய அரசு மற்றும் அதானி குழுமத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அதை 2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]