சென்னை; தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை வழக்கறிஞர் விஷால் திவாரி தொடர்ந்துள்ளதார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதைத்தொடர்ந்து, அதானியை கைது செய்யவேண்டும் என ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
முன்னதாக, அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, , காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும், இதை மறைத்து அதானி நிறுவனம் அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்கிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தவிவகாரம், ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக முழு விசாரணை நடத்தவேண்டும் என்றும், அமெரிக்காவில் லஞ்ச வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, அதானி குழுமத்தின் மீதான செபி விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகவும், சந்தை கட்டுப்பாட்டாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் உள்ளதுn என தெரிவித்துள்ளார்.