கடந்த டிசம்பர் 19 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வெடித்த போது, உத்தர பிரதேச காவல்துறை முன்கூட்டியே அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

மாநிலம் முழுவதும் தடை உத்தரவுகளைப் பிறப்பித்ததுடன் குறைந்தது 1,200 எதிர்ப்பாளர்களைக் கைது செய்தது, மேலும் பதின்ம வயதினர் உட்பட, ஆயிரக்கணக்கானோரைக் காவலில் வைத்தது. மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அத்தகைய கைது நடவடிக்கையை, பல சந்தர்ப்பங்களில் மிருகத்தனமாகவும் இருந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க காவல்துறை போராடி வருகிறது.

முசாஃபர்நகர், வாரணாசி மற்றும் லக்னோவிலிருந்து பெற்ற 13 நீதிமன்ற உத்தரவுகளை ஸ்க்ரோல்.இன் மூலம் பகுப்பாய்வு செய்ததில், கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கியது தெரிய வந்தது ஏனெனில், காவல்துறையினரால் சாட்சியங்களை முன் வைக்க முடியவில்லை.

“குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கு என்ன என்பது கோடிட்டுக் காட்டப்படவில்லை“, என்று முசாஃபர்நகரில் கைது செய்யப்பட்ட 14 நபர்களுக்கான ஒரு ஜாமீன் உத்தரவு, மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த உத்தரவுகளை எதிரொலித்தது.

இந்திய முஸ்லீம்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தப்படும் என்று பலரும் எண்ணி அஞ்சிய – சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து சூடு பிடிப்பதால், டிசம்பர் மாதத்தில் அதிக பட்ச வன்முறை, கைதுகள் மற்றும் உயிரிழப்புகளைக் கண்ட உத்தரப்பிரதேசத்தின் மேல் கவனம் திரும்பியது.

பல சாட்சிகள், வன்முறையைத் தூண்டியது காவல்துறைதான் காரணம் என்று கூறியுள்ளனர், இது பல நிகழ்வுகளில் வீடியோக்களின் மூலம் வெளி வந்துள்ளது. மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் சான்றுகள் அல்லது அதன் நீக்கம் ஆகியவற்றை பதிவில் பார்க்கிறார்கள்.

முசாஃபர்நகர்

ஜனவரி 13ம் தேதி, முசாஃபர்நகரில் உள்ள அமர்வு நீதிமன்றம், கடந்த டிசம்பர் 20ம் தேதியன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக வன்முறைக் குற்றச்சாட்டுக்கு ஆளான 14 பேருக்கு ஜாமீன் வழங்கியது.  அவர்கள் மீது கலவரம், அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுப்பது, அவர்களைத் தாக்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட 18 காவல்துறையினர் சார்பாக அரசுத்தரப்பிலிருந்து தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலை ஜாமீன் உத்தரவு மீண்டும் உருவாக்குகிறது. அதில், அவர்களுக்கு எந்த வகையான காயங்கள் ஏற்பட்டன என்பதை விவரிக்கிறது. எவ்வாறாகினும், காயங்கள் ஆழமாக இல்லை என்று அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டது: “போலீஸ் அதிகாரிகள் உடல் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தலைக்கவசங்களைக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு நிறைய சேதம் ஏற்படவில்லை.“

குற்றம் சாட்டப்பட்டவர் பொது சொத்துக்களை அழித்ததைக் காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பு கூறியது. மேலும், நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளன“, என்றும் இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தது.

ஆனால், எதிர் தரப்பு வழக்கறிஞர்களால் காவல்துறை காணொளி வடிவில் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. “3000 பேர் இருந்த கூட்டத்தில் யாருக்கும் எந்த ஒரு குறிப்பான பங்களிப்பும் இல்லை“. என்று மேலும் தெளிவு படுத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் ஜாமீன் பத்திரத்தை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

வாரணாசி

கடந்த டிசம்பர் 19 தேதியன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாரணாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 69 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நீண்டகால ஆர்வலர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் மீது ஆயுதங்களுடன் கலவரம் செய்தது, அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் அவர்களைத் தாக்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் 1 ஜனவரி 2020 அன்று ஜாமீன் வழங்கப்பட்டு,  அவர்கள் ஒவ்வொருவரும் ரூ.25,000 க்கான இரண்டு பத்திரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆர்வலர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது, வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தெளிவான பங்கு எதுவும் நிறுவப்படவில்லை, அனுமதியைப் பெறாமல் போராட்டத்தில் பங்கேற்றனர் என்பதைத் தவிர, என்று நீதிபதி குறிப்பிட்டார்.

லக்னோ

கடந்த 19 டிசம்பர் அன்று, ஆர்வலர் சதாஃப் ஜாஃபர், லக்னோவின் பரிவர்த்தன் சவுக்கில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபோது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். போலீசார் அவரைக் கைது செய்து இழுத்துச் செல்கையில், ஜாஃபர் அந்த என்கவுண்டரை நேரடியாக ஒளிபரப்பினார். அவர் மீது கலவரம், கொலை முயற்சி மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டது.

இந்த உத்தரவில், நடந்த வன்முறையில் ஜாஃபரின் பங்கை நிறுவ எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி முடிவு செய்து, வழக்கின் தகுதிகள் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

லக்னோவில் டிசம்பர் 20 ம் தேதியன்று நடந்த போராட்டங்கள் தொடர்பாக, ராபின் வர்மா என்ற ஆர்வலர், தன் நண்பரான ஓமர் ரஷீதுடன் ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தபோது காவல்துறை அதிகாரிகளால் கைது செய்து தூக்கிச் செல்லப்பட்டார்.

வர்மா 25 நாட்கள் சிறையில் கழித்தார். காவல்துறையின் வழக்கமான குற்றச்சாட்டான, ஒரு பயங்கர ஆயுதத்தால் கலகம் செய்தல், அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்தல் மற்றும் அவர்களைத் தாக்கியது உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.

ஜனவரி7, 2020 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அதற்கு ஒரு வாரம் கழித்து, ரூ.50,000 க்கான இரண்டு பத்திரங்களை வழங்கிய பின்னர் அவர் லக்னோ மாவட்ட சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

வர்மாவுக்கான ஜாமீன் உத்தரவிலும், அவருக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தது.

லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்நோக்கி, கடந்த டிசம்பர் 18ம் தேதியன்று, வழக்கறிஞரும், மனித உரிமைகள் குழுவின் தலைவருமான முகமது ஷோயேப், காவல்துறை அதிகாரிகளால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.  அடுத்தநாள், அவர் தனது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர், ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்த பின்னரே, அவர் முறையாகக் கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை காவல்துறை வெளிப்படுத்தியது.

ஜனவரி 15 ஆம் தேதி, லக்னோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் 76 வயதான வழக்கறிஞர் ஷோயேபுக்கு ஜாமீன் வழங்கியது.

அந்த உத்தரவில், வன்முறைக்கிளர்ச்சியில் குற்றம் சாட்டப்பட்டவரின் பங்கை நிறுவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அரசுத் தரப்பு கூறியதாக நீதிபதி குறிப்பிட்டார். “சம்பவம் நடந்த போது குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான உறுதியான சான்றுகள் இன்னும் தொகுக்கப்படவில்லை“, என நீதிபதி கூறினார்.