அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க, அரசு நிர்வகிக்கும் ‘டிரம்ப்Rx’ ஆன்லைன் மருந்து தளத்தை தொடங்குவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.
“அமெரிக்கர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தள்ளுபடி விலையில் வாங்கவும் பணத்தைச் சேமிப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்” என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் மூலம் அனைத்து அமெரிக்கர்களும், “பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் / பயன்படுத்தும் மருந்துகளில் பலவற்றை” வாங்க முடியும் என்று டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
குறிப்பாக, பிரபலமான GLP-1 எடை குறைப்பு மருந்துகள் இதில் சேர்க்கப்படும் என்று டிரம்ப் கூறினார். ஓசெம்பிக் மருந்தின் விலை “$1,000-லிருந்து $199 ஆகக் குறையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு GLP-1 மருந்தான வெகோவியின் விலையும் $1,300-லிருந்து $199 ஆகக் குறையும் என்றும் அவர் கூறினார்.
தனது நிர்வாகத்தால் உறுதிசெய்யப்பட்ட இந்த மருந்து விலை குறைப்பு “வரலாற்றிலேயே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலையில் செய்யப்பட்ட மிகப்பெரிய குறைப்பு” என்றும் “இந்த மாபெரும் விலை குறைப்புக்கு அருகில் கூட யாராலும் வரமுடியாது” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, மருந்து நிறுவனங்கள் உலகில் எந்த நாட்டில் குறைந்த விலையில் விற்கிறார்களோ, அதே விலையில் அமெரிக்க மக்களுக்கும் மருந்துகளை விற்க ஒப்புக்கொண்டுள்ளன.
டிரம்ப்ஆர்எக்ஸ் இணையதளம், நுகர்வோரை நேரடியாக உற்பத்தியாளர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்தகங்களுக்குச் சென்று நேரடியாக மருந்துகளை வாங்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய கூப்பன்களுக்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது.
இதன்மூலம் அந்தந்த மருந்து நிறுவனங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் செலுத்தப்படும் அதே விலையில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், அமெரிக்கர்களுக்கு விலைகள் கணிசமாகக் குறைந்தாலும், மற்ற நாடுகளில் அவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]