சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் இந்தியா வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்கப்பட உள்ளது.

இந்தியாவில் வங்கதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. வரும் 19ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இத்தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன.

வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை காலை 9.45 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

டிக்கட்டுகளை https://insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்குரிய அனைத்து நாட்களுக்கும் சேர்த்து ரூ.1,000, ரூ.1,250, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.