டெல்லி
நாளை நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.\
மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. மேலும் கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டு பிறகு கடந்த 1970-ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்டது.
அப்போது முதல் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்மொழிந்தார். திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
இக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
மத்திய சட்டத் துறை அமைசர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் நாளை அறிமுகம் செய்கிறார். மக்களவை, சட்டசபை தொடர்பாக ஒரு மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன.