டெல்லி

நாளை தேசிய மகளிர் ஆணையம் மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்த உள்ளது.

மாணவி ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டிருந்தார். இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் மகாராஷ்டிர முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் தீட்சித் ஐ.பி.எஸ்.,(ஓய்வு) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நாளை இவர்கள் இருவரும் சென்னைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். பிறகு இது தொடர்பாக எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு பரிந்துரைக்க உள்ளனர்.