டாக்கா
இன்று வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்கிறது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் ஆட்சி செய்து வந்த போது அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஷேக் ஹசீனா த்னது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட அதிபர் முகமது சஹாபுதீன் இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. எனவே வங்கதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுசை நியமித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவி ஏற்கும் என்று ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். நேற்று ராணுவ தளபதி, “இடைக்கால அரசின் பதவியேற்பு விழா நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.